நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக கனடாவிடம் 'வலுவான ஆதாரம் இல்லை'; ஒப்புக்கொண்ட ட்ரூடோ
கனடா நாட்டின் வெளிநாட்டு தலையீடு விசாரணைக்கு முன் சாட்சியமளித்த அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை இந்தியா கொன்றதாக பகிரங்கமாக குற்றம் சாட்டுவதற்கு கனடா உளவுத்துறை வழங்கிய உளவு தகவல் மட்டுமே ஆதாரம் என்றும், வேறு வலுவான எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராயுமாறு இந்தியாவிடம் கனேடிய ஏஜென்சிகள் கேட்டபோது, புதுடெல்லி அதற்கான ஆதாரத்தை நாடியதாக அவர் கூறினார். "அந்த நேரத்தில், அது முதன்மையாக உளவு தகவல் மட்டுமே, வலுவான ஆதாரங்கள் அல்ல," ட்ரூடோ ஒப்புக்கொண்டார். ஆதாரம் ஏதும் வழங்காமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக கனடா மீது இந்திய அரசு பலமுறை குற்றஞ்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியிடம் பகிர்ந்துகொண்டதாக ட்ரூடோ தெரிவித்தார்
2023 செப்டம்பரில் புது டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்கு பின்னர், கனடா பிரதமர் இந்தியாவுக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை பகிரங்கப்படுத்தினார். "நான் உட்கார்ந்து (பிரதமர் மோடியுடன்), அவர்கள் (நிஜ்ஜார் கொலையில்) ஈடுபட்டுள்ள தகவலை தெரிவித்தேன். அதைப் பற்றி உண்மையான கவலையை வெளிப்படுத்தினேன். அவர் வழக்கமான பதிலுடன் பதிலளித்தார், அதாவது இந்தியா அரசிற்கு எதிராக பேசுபவர்கள் கனடாவில் வெளியப்படையாக உள்ளனர் எனவும் அவர்கள் கைது செய்யப்படுவதைப் பார்க்க விரும்புகிறேன் எனவும் மோடி தெரிவித்தார்" என்று அவர் கூறினார். விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க மறுத்ததாகவும், தனது அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதல்களை இரட்டிப்பாக்கியது என்றும் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இது "கனடாவின் இறையாண்மையை இந்தியா மீறியது" என்பதை தெளிவுபடுத்தியது என்றார்.
விசாரணைகுழு முன் ஆஜரான கனடாவின் பிரதமர்
கனடாவில் காலிஸ்தான் சார்பு இயக்கத்தின் உறுப்பினர்களை குறிவைக்க இந்திய இராஜதந்திரிகள் தகவல்களை சேகரிப்பதிலும், குற்றக் கும்பல்களைப் பயன்படுத்துவதிலும் ஈடுபட்டதாக கனடாவின் சமீபத்திய குற்றச்சாட்டுக்குப் பிறகு, ட்ரூடோ இந்த விசாரணை குழு முன் ஆஜரானார். நிஜ்ஜார் கொலையில் இந்திய முகவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு "நம்பகமான ஆதாரங்கள்" இருப்பதாக அவர் கமிட்டியின் முன் தனது கூற்றை மீண்டும் வலியுறுத்தினார். நிஜ்ஜார் கொலையில் ஈடுபட்டதற்காக ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையால் (RCMP) முன்னர் குறிப்பிடப்பட்ட கேங்க்ஸ்டர், லாரன்ஸ் பிஷ்னோய் என்றும் ட்ரூடோ பெயரிட்டார். இந்திய தூதர்கள் கனேடியர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு அனுப்புவதாக ட்ரூடோ குற்றம் சாட்டினார்.