மூளையை பாதிக்கும் புதிய வெட்லேண்ட் வைரஸ்; பகீர் கிளப்பும் விஞ்ஞானிகள்
2019 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸின் ஹாட்ஸ்பாட்டாக உருவாகி, உலகம் முழுவதும் மிகப்பெரும் சுகாதார அவசரநிலையை ஏற்படுத்திய சீனாவில் தற்போது மீண்டும் மூளை நோய்களை ஏற்படுத்தக்கூடிய புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெட்லேண்ட் வைரஸ் (WELV) என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸ் முதன்முதலில் சீனாவின் ஜின்ஜோ மாகாணத்தில் ஜூன் 2019இல் கண்டறியப்பட்டது. முதலில் பாதிக்கப்பட்ட நபர் வெட்லேண்டில் உள்ள பூங்காவிற்குச் சென்றபோது இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. செப்டம்பர் 4 ஆம் தேதி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் வெளியிட்ட அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டில் இன்னர் மங்கோலியாவில் உள்ள வெட்லேண்ட் பூங்காவில் ஒரு வண்டு கடித்த நபர் தொடர்ச்சியான காய்ச்சல் மற்றும் பல உறுப்பு செயலிழப்புடன் அனுமதிக்கப்பட்டார்.
இதுவரை அறியப்படாத வைரஸ்
அந்த நோயாளியிடம் சோதனை செய்ததில் விஞ்ஞானிகள் அடுத்த தலைமுறை வரிசைமுறையில் முன்பு அறியப்படாத ஆர்த்தோனைரோவைரஸ் தொற்றுக்கு ஆளானது தெரிய வந்தது. இதையடுத்து அந்த வைரஸிற்கு வெட்லேண்ட் வைரஸ் (WELV) என பெயரிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் அதே பூங்காவிற்குச் சென்ற நபர்களின் மாதிரியை எடுத்து சோதனை மேற்கொண்டனர். இதில் இன்னர் மங்கோலியா, ஹீலாங்ஜியாங், ஜிலின் மற்றும் லியோனிங், சீனாவில் இருந்து 17 நோயாளிகளுக்கு கடுமையான WELV தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா நோயாளிகளும் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்தவில்லை என்றாலும், கிட்டத்தட்ட அனைவருக்கும் காய்ச்சல், தலைச்சுற்றல், தலைவலி, உடல்நலக்குறைவு, மயால்ஜியா, மூட்டுவலி மற்றும் முதுகுவலி போன்ற பொதுவான புகார்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.