LOADING...
நேபாளம்: பதவியேற்று ஒரு மாதத்தில் பலேந்திர ஷா அரசுக்கு வந்த சோதனை; 2 அமைச்சர்கள் விலகல்
பதவியேற்று ஒரு மாதத்தில் நேபாளத்தில் பலேந்திர ஷா அரசுக்கு வந்த சோதனை

நேபாளம்: பதவியேற்று ஒரு மாதத்தில் பலேந்திர ஷா அரசுக்கு வந்த சோதனை; 2 அமைச்சர்கள் விலகல்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 23, 2026
06:29 pm

செய்தி முன்னோட்டம்

நேபாளத்தில் பதவியேற்று ஒரு மாதமே ஆன பிரதமர் பலேந்திர ஷாவின் தலைமையிலான புதிய அரசு, தொடர்ச்சியான அமைச்சர்களின் விலகல் மற்றும் கொள்கை ரீதியான சிக்கல்களால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. நாட்டின் இளைய பிரதமரான ஷா, பல்வேறு சவால்களுக்கு இடையே தனது ஆட்சியின் தொடக்கத்திலேயே பெரும் சோதனைகளை எதிர்கொண்டுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

உள்துறை அமைச்சர்

உள்துறை அமைச்சரின் பதவி விலகல்

நிதி தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான உள்துறை அமைச்சர் சுதன் குருங், தனது பதவியை புதன்கிழமை (ஏப்ரல் 22) ராஜினாமா செய்தார். கடந்த மார்ச் 27 ஆம் தேதி பதவியேற்ற அவர், "மக்களின் நம்பிக்கையை விடப் பெரிய பதவி எதுவுமில்லை" என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுப் பதவி விலகினார். இவர் மீது ஏற்கனவே பணமோசடி வழக்கில் சிக்கியுள்ள தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பு மற்றும் முதலீட்டு விவரங்களை மறைத்தது போன்ற தீவிரமான புகார்கள் இருந்தன. இவர் பதவி வகிக்கும் வரை முறையான விசாரணை நடைபெறாது என்று எதிர்க்கட்சிகள் மற்றும் தற்போதைய இளைஞர் இயக்கங்கள் அழுத்தம் கொடுத்ததே இந்த விலகலுக்குக் காரணமாக அமைந்தது.

அமைச்சரவை

அமைச்சரவையில் தொடரும் குழப்பம்

சுதன் குருங் விலகலுக்கு முன்னதாக, ஏப்ரல் 9 ஆம் தேதி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தீபக் குமார் சா பிரதமர் ஷாவால் நீக்கப்பட்டார். தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மனைவியை சுகாதார காப்பீட்டு வாரியத்தில் நியமித்ததன் மூலம், அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒரு மாதத்திற்குள்ளேயே இரண்டு அமைச்சர்கள் வெளியேறியிருப்பது, பலேந்திர ஷாவின் புதிய அரசு நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பேணுவதில் தடுமாறி வருவதைக் காட்டுகிறது.

Advertisement

விமர்சனங்கள்

அரசின் மீது எழும் கடும் விமர்சனங்கள்

அமைச்சர்களின் ராஜினாமா தாண்டி, ஷா அரசின் கொள்கைகளும் பெரும் போராட்டங்களைச் சந்தித்து வருகின்றன. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கட்டாய சுங்க வரி விதித்திருப்பது, எல்லையோர பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மேற்கு ஆசியப் போர்ச்சூழலால் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்தால் தவித்து வரும் மக்களுக்கு, இந்த புதிய வரி விதிப்பு மேலும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல்கலைக்கழகங்களில் செயல்படும் மாணவர் அமைப்புகளைக் கலைக்கும் அரசின் முடிவுக்கும் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

பலேந்திர ஷா

பலேந்திர ஷாவின் சவால்கள்

நேபாளத்தின் Gen-Z இயக்கத்தின் ஆதரவோடு பதவியேற்ற பலேந்திர ஷா, ஊழலுக்கு எதிரான 100 அம்ச சீர்திருத்தங்களை அறிவித்து தனது ஆட்சியைத் தொடங்கினார். இருப்பினும், அமைச்சர்களின் மீதான நிதி முறைகேடு மற்றும் நிர்வாகச் குளறுபடிகள் அவரது அரசின் நம்பகத்தன்மையைச் சோதித்து வருகின்றன. பலேந்திர ஷா தற்போது உள்துறை அமைச்சகத்தையும் சேர்த்து கவனித்து வருகிறார். இந்தச் சிக்கல்களை அவர் எவ்வாறு கையாண்டு, மக்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கப்போகிறார் என்பது நேபாள அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement