அனைத்து எழுத்தாளர்களையும் கூண்டோடு பணி நீக்கம் செய்தது நேஷனல் ஜியோகிராஃபிக்
புகழ்பெற்ற நேஷனல் ஜியோகிராஃபிக் பத்திரிகை தனது நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து முழுநேர எழுத்தாளர்களையும் புதன்கிழமை (ஜூன் 28) பணியிலிருந்து நீக்கி ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் தாய் நிறுவனமான டிஸ்னி சமீபகாலமாக மேற்கொண்டு வரும் செலவு குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிறுவனத்தில் முழுநேர எழுத்தாளர்களாக பணிபுரிந்த ஏறக்குறைய 19 பணியாளர்களுக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கை குறித்து கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அறிவிக்கப்பட்டு, தற்போது நீக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இன்னும் அதிகமாகப் படிக்கப்படும் இதழான நேஷனல் ஜியோகிராஃபிக், இனி ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர்களை மட்டுமே கொண்டு செயல்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
2015 முதல் நான்கு முறை பணி நீக்க நடவடிக்கையை எதிர்கொண்ட நேஷனல் ஜியோகிராஃபிக்
2015ல் நேஷனல் ஜியோகிராஃபிக்கின் பங்குகளை ஃபாக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. மேலும் 2019இல் ஃபாக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலம் நிறுவனத்தை டிஸ்னி கைப்பற்றியது. 2015 முதல் இதுவரை நிறுவனம் நான்கு முறை ஆட்குறைப்பு நடவடிக்கை எதிர்கொண்டுள்ளது. நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்த நடவடிக்கை குறித்து கூறுகையில், "நேஷனல் ஜியோகிராஃபிக் ஒரு மாதாந்திர இதழைத் தொடர்ந்து வெளியிடும். சமீபத்திய பணியாளர் மாற்றங்கள் எங்கள் திறனை மாற்றாது". "மாறாக இது வெவ்வேறு விஷயங்களைச் சொல்லவும், எங்கள் பல தளங்களில் எங்கள் பார்வையாளர்களை சந்திக்கவும் எங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது". "இவை தரத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்று கூறுவது தவறானது." என்று தெரிவித்துள்ளார்.