மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு
புத்த தவக்காலத்தை முன்னிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மியான்மார் தலைவர் ஆங் சான் சூகி உட்பட 7,000 க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு இராணுவ அரசாங்கம் மன்னிப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2020இல் மியான்மாரில் நடந்த தேர்தலில் ஜனநாயகப் பிரமுகர் ஆங்-சான்-சூகியின் கட்சி வெற்றி பெற்றது. அப்போது நடந்த தேர்தலில் வாக்காளர் மோசடி நடைபெற்றதாக ஆங் சான் சூகியின் மீது குற்றம் சாட்டிய ராணுவம், பிப்ரவரி 1, 2021அன்று மியான்மர் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இவை நிரூபிக்கப்படவில்லை என்றாலும், சூகி மற்றும் பிற உயர்மட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் சிறைபிடித்தது.
ஐந்து குற்றங்களில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட இருக்கிறது
ஆட்சி கவிழ்க்கப்பட்டதில் இருந்து, ஆங் சான் சூகியின் மீது 19 வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. இந்த குற்றசாட்டுகள் எல்லாம் போலியானது என்று உரிமைக் குழுக்கள் கூறுகின்றன. ஆனால், ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இராணுவ ஆட்சிக் குழுவால் கைது செய்யப்பட்ட 16,600க்கும் மேற்பட்டவர்கள் இன்னும் சிறையில் இருக்கின்றனர். இந்நிலையில், மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகியின் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றங்களில் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த 5 குற்றங்களுக்காக அவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. கடந்த வாரம் சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்ட ஆங் சான் சூகி, ஆட்சி கவிழ்ப்பு நடந்ததில் இருந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.