தென்கிழக்காசியாவில் யாகி சூறாவளியால் கடும் சேதம்; 500க்கும் மேற்பட்டோர் பலியான பரிதாபம்
செய்தி முன்னோட்டம்
மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட யாகி சூறாவளி மற்றும் பருவகால பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் குறைந்தது 226 உயிர்களைக் கொன்றது.
77 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அரசு ஊடகங்கள் செவ்வாயன்று (செப்டம்பர் 17) செய்தி வெளியிட்டுள்ளன. புதிய புள்ளிவிவரங்கள் மூலம் தென்கிழக்கு ஆசியாவில் புயலால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை 500ஐ தாண்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்புகளின் கணக்கீடு மெதுவாக உள்ளது.
ஆங் சான் சூகியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் இருந்து இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் 2021இல் தொடங்கிய உள்நாட்டுப் போரால் மியான்மர் சிதைந்துள்ளது.
இந்நிலையில் சூறாவளி மற்றும் மழை வெள்ளம் அந்நாட்டு மக்களை மேலும் சீர்குலைத்துள்ளது.
யாகி சூறாவளி
யாகி சூறாவளி பாதிப்பு
யாகி சூறாவளி முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோஸைத் தாக்கியது. வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோஸில் நான்கு பேரும் இதற்கு பலியானதாக மனிதாபிமான உதவிக்கான ஆசியான் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பைன்ஸில் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 26 பேர் காணாமல் போயுள்ளனர்.
மியான்மர் முழுவதும் வெள்ளத்தால் சுமார் 6,31,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று திங்களன்று ஐநா தெரிவித்துள்ளது.
மியான்மர் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் பருவமழையின் போது மோசமான சூழலை எதிர்கொள்கிறது.
2008இல், நர்கிஸ் சூறாவளி ஐராவதி ஆற்றின் டெல்டாவைச் சுற்றி 138,000 க்கும் அதிகமான மக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது.
அப்போதைய இராணுவ அரசாங்கம் உதவிகளை ஏற்றுக்கொள்வதை தாமதப்படுத்தியதால் கடுமையான சேதத்தை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.