ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் டிரம்ப்! பிரான்சில் மோடி - டிரம்ப் சந்திப்பு நடக்க வாய்ப்பு?
செய்தி முன்னோட்டம்
பிரான்சின் ஏவியன்-லெ-பெய்ன்ஸ் நகரில் இந்த மாதம் நடைபெற உள்ள ஜி7 உச்சி மாநாட்டில் தான் பங்கேற்க உள்ளதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த மாநாட்டிற்குப் பார்ட்னர் நாடாக இந்தியாவும் அழைக்கப்பட்டுள்ளதால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையே ஒரு முக்கிய இருதரப்பு சந்திப்பு நிகழ அதிக வாய்ப்புகள் உருவாகியுள்ளன. கடந்த சில மாதங்களாக வர்த்தகக் கொள்கைகள் மற்றும் சர்வதேச விவகாரங்களால் இந்தியா - அமெரிக்கா உறவில் நிலவி வரும் சுணக்கத்தை இந்த நேருக்கு நேர் சந்திப்பு மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் பிரான்ஸ் பயண விபரங்கள்
வொயிட் ஹவுஸ் யுஎஃப்சி பைட்ஸ் முடித்த கையோடு பிரான்ஸ் ஜி7 மாநாட்டிற்குப் புறப்படும் டொனால்ட் டிரம்ப்
பிரான்சில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெற உள்ள உயர்மட்ட ஜி7 உச்சி மாநாட்டில் தான் நேரில் கலந்து கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளம் வழியாக அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் ஜூன் 14 அன்று நடக்கும் உலக சாம்பியன்ஷிப் யுஎஃப்சி சண்டை நிகழ்வு முடிந்தவுடன், அவர் உடனடியாக பிரான்ஸிற்குப் புறப்படத் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே வெள்ளை மாளிகையில் உலகத்தரம் வாய்ந்த சாம்பியன் வீரர்கள் மோதும் இத்தகையதொரு பொழுதுபோக்கு நிகழ்வு இதுவரை நடந்ததில்லை என்றும் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி ஜி7 மாநாடு பங்கேற்பு
பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்த பிரதமர் நரேந்திர மோடியின் ஜி7 மாநாடு பங்கேற்பு
ஜி7 மாநாட்டிற்கு இந்தியாவைப் பார்ட்னர் நாடாகப் பிரான்ஸ் அழைத்துள்ள நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரான்ஸ் அமைச்சர் ஜீன்-நோயல் பரோட் இடையே முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 15-17 தேதிகளில் ஏவியன் நகரில் நடக்கும் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பதை உறுதி செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. உலகளாவிய மேக்ரோ பொருளாதார சமநிலையின்மை மற்றும் சர்வதேச கூட்டாண்மை ஒற்றுமை ஆகிய முக்கிய விவகாரங்களில் இந்தியாவின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்றும் அந்த அதிகாரப்பூர்வ அறிக்கையில் பிரான்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தியா அமெரிக்கா உறவு நிலவரம்
டிரம்ப் வர்த்தக வரிகள் மற்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதலால் இந்தியா அமெரிக்கா இடையே நிலவும் சுணக்கம்
பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் கடைசியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மோடியின் அமெரிக்க சுற்றுப்பயணத்தின் போது நேரில் சந்தித்துப் பேசினர். ஆனால் அதன் பிறகு, டிரம்ப் விதித்த புதிய வர்த்தக வரிகள், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தச் சிக்கல்கள் மற்றும் இந்தியாவின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை வாஷிங்டன் தொடர்ந்து விமர்சித்து வந்தது உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இத்தகைய கடுமையான சூழல்களுக்கு மத்தியிலும், பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் தங்களின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் மூலமாகத் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மோடி டிரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை எதிர்பார்ப்பு
வர்த்தக ஒப்பந்த முட்டுக்கட்டைகளை உடைத்து உறவை புதுப்பிக்க உதவும் என நம்பப்படும் மோடி டிரம்ப் சந்திப்பு
சர்வதேச விவகாரங்களுக்கான நிபுணர்களின் கருத்துப்படி, இந்த ஜி7 மாநாட்டுச் சந்திப்பானது வாஷிங்டன் மற்றும் புது தில்லி இடையேயான உறவை மீண்டும் சீரமைக்க ஒரு நல்வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது. தற்போது முடங்கிக் கிடக்கும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தங்களில் ஒரு முக்கிய முன்னேற்றம் அல்லது திருப்புமுனை ஏற்படுவதற்கு இந்த நேருக்கு நேர் பேச்சுவார்த்தை பெரிதும் உதவும். டிரம்ப் விதித்த சில வர்த்தக வரிகளை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ள சூழலில், அவர் புதிய வரிகளைத் திட்டமிடுவதால், இந்த சந்திப்பு இரு நாடுகளிடையே சிறந்த பரஸ்பரப் புரிதலை உருவாக்க உதவும் என நிபுணர் ராபிந்தர் சச்தேவ் தெரிவித்துள்ளார்.