LOADING...
மோடி -டிரம்ப் நாளை சந்திக்கவுள்ளனர்; ஹார்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் படுகொலை, வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
மோடி -டிரம்ப் நாளை சந்திக்கவுள்ளனர்

மோடி -டிரம்ப் நாளை சந்திக்கவுள்ளனர்; ஹார்முஸ் நீரிணையில் இந்திய மாலுமிகள் படுகொலை, வர்த்தக ஒப்பந்தம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

எழுதியவர் Venkatalakshmi V
Jun 16, 2026
03:10 pm

செய்தி முன்னோட்டம்

பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் நடைபெறவுள்ள 52-வது ஜி7 (G7) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் புதன்கிழமை அன்று மிக முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் அண்மையில் ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொல்லப்பட்ட விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் இந்த சந்திப்பு உலக அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

விவரங்கள்

தலைவர்களின் சந்திப்பு விவரங்கள்

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, மோடி - டிரம்ப் சந்திப்பு புதன்கிழமை உள்ளூர் நேரப்படி மதியம் 2:45 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 6:15 மணிக்கு) நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக மாலை 3:30 மணிக்கு அதிபர் டிரம்ப் ஊடகங்களைச் சந்திக்கவுள்ளார். கடந்த ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தத்தை தான் தான் ஏற்படுத்தியதாக டிரம்ப் கூறியதை இந்தியா மறுத்திருந்தது. அதன் பிறகு, இரு நாடுகளின் பாதுகாப்பு வியூகங்களை மாற்றியமைத்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இவர்கள் கடைசியாக பிப்ரவரி 2025-இல் வாஷிங்டனில் நேரில் சந்தித்தனர்.

மாலுமிகள் கொலை

வெளியுறவுத்துறை அமைச்சர்களின் காரசார விவாதம்

ஈரான் எல்லையில் இந்திய ஊழியர்களுடன் சென்ற கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 இந்திய மாலுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக அமெரிக்க தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்கனவே இருமுறை நேரில் சம்மன் அனுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை தொடர்பு கொண்டு, வளைகுடா பகுதியில் அமெரிக்க கடற்படை நடத்திய கொடிய தாக்குதலுக்கு இந்தியாவின் வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தார் அமைச்சர் ஜெய்சங்கர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பேசிய அமெரிக்கத் தரப்பு, "ஹார்முஸ் நீரிணையில் அமைதியைக் காக்க அமெரிக்கப் படைகள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு அனைத்து வணிகக் கப்பல்களும் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும்" எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

Advertisement

வர்த்தகம்

வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரிகள் காரணமாக இரு நாட்டு வர்த்தக உறவில் தொய்வு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பில் இடைக்கால வர்த்தக ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி ஜூலை நடுப்பகுதிக்குள் முடிவடையும் என்று நம்புகிறார். அதிபர் டிரம்பும், "பிரதமர் மோடி எனது நல்ல நண்பர், அவருடன் சுமுகமான உடன்பாட்டை எட்டுவோம்" எனத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த ஜி7 மாநாட்டிலேயே இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பில்லை என்றும், தொழில்நுட்ப ரீதியான ஆலோசனைகள் தொடரும் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement