மேயர் கொலை, போதைப்பொருள் வன்முறைக்கு எதிராக மெக்சிகோவில் Gen Z இளைஞர்கள் மாபெரும் போராட்டம்
செய்தி முன்னோட்டம்
மெக்சிகோவில் மேயர் கார்லோஸ் மான்சோ கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் கும்பல் வன்முறை, ஊழல் மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவற்றைக் கண்டித்தும், மெக்சிகோ சிட்டி உட்படப் பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான Gen Z இளைஞர்கள் சனிக்கிழமை (நவம்பர் 15) மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் தலைமையிலான அரசாங்கம் போதைப்பொருள் கும்பல்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துவிட்டதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். மிக்கோகனில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராகத் தீவிரப் பிரச்சாரம் செய்து வந்த மேயர் கார்லோஸ் மான்சோ கொல்லப்பட்டதே, இந்த இளைஞர்கள் நாடு முழுவதும் அணிதிரள முக்கியக் காரணமாக அமைந்தது.
மோதல்
போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல்
எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் உட்படப் பல தரப்பினரின் ஆதரவைப் பெற்ற இந்தப் போராட்டம், ஆரம்பத்தில் அமைதியாக இருந்தபோதும், தலைநகரில் பேரணியின் முடிவில் இளம் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கற்கள், பட்டாசுகள், குச்சிகள் ஆகியவற்றை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், காவல்துறையினரின் கேடயங்களையும் பறித்துச் சென்றனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் தடியடிப் பிரயோகம் மூலம் பதிலடி கொடுத்தனர். இந்த வன்முறை மோதல்களில் 100 போலீஸ் அதிகாரிகள் உட்பட 120 பேர் காயமடைந்தனர் என்றும், வன்முறை தொடர்பாக 20 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதாகவும் மெக்சிகோ சிட்டி பாதுகாப்புச் செயலாளர் பாப்லோ வாஸ்குவெஸ் தெரிவித்தார்.