ஊழியர்களை அலுலவகத்திற்கு அழைக்கும் மெட்டா.. அதிருப்தியில் ஊழியர்கள்!
ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, முழுவதுமாக வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதிக்கும் தங்கள் கொள்கையை திரும்ப்பெறுவதாக அறிவித்திருக்கிறது. ஆனால், அதற்கு பதிலாக ஹைபிரிட் முறையை அனுமதிக்கவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. உலகின் பெரும்பாலான நிறுவனங்கள் கொரோனா காலத்தில் தங்கள் ஊழியர்களை முழுவதுமாக வீட்டிலிருந்தே வேலை பார்க்க அனுமதித்ததன. ஆனால், பல டெக் நிறுவனங்களில் இன்னும் அந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. அதனை மாற்றி அலுவலகத்திற்கு ஊழியர்களை வரவைக்க முயற்சி எடுத்து வருகின்றன மெட்டா, அமேசான் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட டெக் நிறுவனங்கள். வெளிநாடுகளில் மட்டுமல்ல இந்தியாவிலும் டிசிஎஸ் உட்பட பல்வேறு டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய அறிவுறுத்தி வருகின்றன.
அலுவலகத்திலிருந்து வேலை:
முழுவதுமாக அலுவலகத்திலிருந்த வேலை என்று இல்லாமல், வாரத்திற்கு மூன்று நாட்கல் அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும் என பெரும்பாலான டெக் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைக் கேட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது மெட்டாவும் அதுபோன்ற ஒரு அறிவிப்பையே தங்கள் ஊழியர்களுக்கு வெளியிட்டிருக்கிறது. இந்த புதிய விதிமுறை வரும் செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வருவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது. வீட்டிலிருந்தே வேலை செய்யும் ஊழியர்களை விட அலுவலகத்திலிருந்து வேலை செய்யும் ஊழியர்களின் திறன் மேம்படுவதாகவும், சிறப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் அந்நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க். ஆனால், அலுவலகம் வந்து வேலை செய்வதற்கு பெரும்பாலான ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.