பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி
வடக்கு பப்புவா நியூ கினியாவில் (PNG) ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழத்தனர். மேலும், 1,100க்கும் மேற்பட்ட வீடுகள் புதையுண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கே சுமார் 600 கி.மீ தொலைவில் உள்ள 'எங்க' மாகாணத்தில் இருக்கும் காகலம் என்ற கிராமத்தில் பெரும்பாலான கிராமவாசிகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த பேரழிவு ஏற்பட்டது. போர்ட் மோர்ஸ்பியில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகம், சேதம் மற்றும் உயிரிழப்புகளின் அளவை மதிப்பிடுவதற்கு PNG அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளது. இதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தொடர்கின்றன
நிலச்சரிவால் பல நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஹெலிகாப்டர்களால் மட்டுமே செல்ல முடியும். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோக்களில், உயிர் பிழைத்தவர்களைத் தேடி குடியிருப்பாளர்கள் பாறைகள், வேரோடு சாய்ந்த மரங்கள் மற்றும் மண் மேடுகளின் மீது ஏறிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. இந்த பேரழிவுக்கு பதிலளித்த பிரதமர் ஜேம்ஸ் மாரப், பேரிடர் அதிகாரிகள், பாதுகாப்புப் படை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு உதவி வருவதாக தெரிவித்தார். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பகுதி கடலோர மாநிலமாகும். எனவே, அந்த பகுதியில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் ஏற்படுவது வழக்கமாகும். கடந்த மார்ச் மாதம், இதே பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.