வெடிபொருட்களுடன் நடமாடிய சந்தேக நபர் கைது: பாரிஸில் உள்ள ஈரான் தூதரகம் முற்றுகை
வெடிபொருட்களுடன் சந்தேக நபர் நடமாடியதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, பாரிஸில் உள்ள ஈரானிய துணைத் தூதரகத்தை இன்று சுற்றி வளைத்த பிரெஞ்சு காவல்துறை, அந்த தூதுரகத்தை சோதனை செய்ய உள்ளது. "ஒரு சந்தேக நபர் ஒரு கைக்குண்டு அல்லது வெடிக்கும் பெல்ட்டை ஏந்தியபடி நுழைவதை ஒருவர் பார்த்திருக்கிறார்" என்று பிரெஞ்சு காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானிய துணைத் தூதரகம் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாரிஸின் 16வது மாவட்டத்தில் உள்ள ஈரானிய துணைத் தூதரகத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் மூடப்பட்டுள்ளதாகவும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் AFP செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேக நபர் கைது
பாரிஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்திலிருந்து யாரோ வெடிமருந்துகளை எடுத்துச் சென்றதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, பிரெஞ்சு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஒரு நபரை கைது செய்தனர். "அந்த நபர் தூதரகத்திலிருந்து வெளியேறிவிட்டார், மேலும் அவர் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்" என்று பிரெஞ்சு அதிகாரிகள் கூறியுள்ளனர். பாரீஸ் போக்குவரத்து நிறுவனமான RATP, ஈரானிய துணைத் தூதரகம் உள்ள கட்டிடத்திற்கு அருகில் உள்ள மெட்ரோ நிறுத்தங்கள் வழியாக செல்லும் இரண்டு மெட்ரோ பாதைகளில் போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.