இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல்
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் 3 பேர் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததையடுத்து, பெரும்பாலான இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவுக்கான தங்களது முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர். இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, தனது நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்புவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறு சீனாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுக்கான ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். இந்நிலையில், தனது இரண்டாவது நாள்(செவ்வாய்- ஜனவரி 9) பயணத்தின் போது, புஜியான் மாகாணத்தில் நடந்த மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் பேசிய அவர், "சீனாவை மாலத்தீவின் "நெருங்கிய" நட்பு நாடு என்று குறிப்பிட்டார்.
பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை பாராட்டிய மாலத்தீவு அதிபர்
"சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றாகவும் வளர்ச்சி கூட்டணிகளில் ஒன்றாகவும் உள்ளது," என்று அவர் கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கால் தொடங்கப்பட்ட பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி(பிஆர்ஐ) திட்டங்களைப் பாராட்டிய அவர், "மாலத்தீவு வரலாற்றில் காணப்பட்ட மிக முக்கியமான உள்கட்டமைப்பு திட்டங்களை அவை வழங்கியுள்ளன" என்று தெரிவித்தார். மேலும், அதிக சுற்றுலா பயணிகளை தனது நாட்டுக்கு அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தினார். "கொரோனாவுக்கு முன்பு எங்கள் நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில், சீனா தான் முதலிடத்தில் இருந்தது. மேலும் அந்த நிலையை சீனா மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" என்று அவர் கூறியுள்ளார்.