துரந்தர் பாணியில் பாகிஸ்தானில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஒப்புக்கொண்ட லஷ்கர் அமைப்பு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானில் வசித்து வந்த லஷ்கர்-இ-தொய்பா(LeT) அமைப்பை சேர்ந்த 30 முதல் 40 தீவிரவாதிகளை 'அறியப்படாத துப்பாக்கிச்சாரிகள்' சுட்டுக் கொன்றுள்ளதாக, அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகி முதன்முறையாக ஒப்புக்கொண்டு பேசியுள்ளது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் சூழ தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய LeT அமைப்பைச் சேர்ந்த ரிஸ்வான் ஹனீஃப்,"இந்திய உளவு முகமைகளால் எங்கள் ஆட்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் கராச்சி, பெஷாவர், ராவல்பிண்டி மற்றும் ராவலகோட் போன்ற இடங்களில் எங்கள் அமைப்பைச் சேர்ந்த 30 முதல் 40 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார். பாகிஸ்தானில் தொடர்ச்சியாக கொல்லப்பட்டு வரும் பயங்கரவாதிகள் குறித்து அந்நாட்டை சேர்ந்த தீவிரவாத அமைப்பே பகிரங்கமாக ஒப்புக்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
எதிர்வினை
பழிசுமத்தும் பாகிஸ்தான்; மறுக்கும் இந்தியா
26/11 மும்பை தாக்குதல் மற்றும் பஹல்காம் தாக்குதல்களில் முதன்மை குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள லஷ்கர் அமைப்பின் தலைவன் ஹஃபிஸ் சயீத் மீதும், அவரது ஆதரவாளர்கள் மீதும் இந்தியாவின் என்.ஐ.ஏ (NIA) அமைப்பினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் தேடப்பட்டு வந்த பல முக்கிய பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் மர்மமான முறையில் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல்களுக்கு இந்திய ஏஜென்சிகளே காரணம் எனப் பாகிஸ்தான் குற்றம் சாட்டி வரும் வேளையில், இந்தியா இக்குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
விவரங்கள்
மர்மமான முறையில் கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதிகள்
ஜஹூர் மிஸ்திரி(மார்ச் 1, 2022): இந்தியன் ஏர்லைன்ஸ் ஐசி-814 விமானக் கடத்தலில் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகம்மது பயங்கரவாதியான இவர் கராச்சியில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பரம்பஜித் சிங் பஞ்ச்வார்(மே 6, 2023): KCF அமைப்பின் தலைவன் லாகூரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ரியாஸ் அகமது/அபு காசிம்(செப்டம்பர் 8, 2023): ஜம்மு காஷ்மீரின் தங்க்ரி தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டிய லஷ்கர் தீவிரவாதி ராவலகோட் பள்ளிவாசலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஷாஹித் லத்தீஃப்(அக்டோபர் 11, 2023): பஜான்கோட் விமானப்படைத் தளத் தாக்குதலின் சூத்திரதாரியும், மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியுமான இவன் ஷியால்கோட் மசூதியில் வைத்துக் கொல்லப்பட்டான்.
அபு கதால்(மார்ச் 16, 2025): 2024 ஜூன் மாதம் ரியாசி யாத்ரீகர்கள் பேருந்து தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் தளபதி அபு கதால் ஜீலம் பகுதியில் வைத்து தீர்த்துக்கட்டப்பட்டான்.