
உலக சிறந்த பீருக்கான விருதுகள் 2025: பல்வேறு பிரிவுகளில் விருது வென்று இந்திய பீர்கள் சாதனை
செய்தி முன்னோட்டம்
இந்திய மதுபான நிறுவனங்களின் தயாரிப்புகள், உலக பீருக்கான விருதுகள் 2025இல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. கடும் போட்டி நிறைந்த இந்த வருடாந்திர நிகழ்வில், இந்திய பீர் வகைகளின் தரம் மற்றும் சுவைக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வெற்றி இந்திய பீர் தயாரிப்புத் துறையின் வளர்ந்து வரும் சர்வதேச அங்கீகாரத்தை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் பிரபலமாக இருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனம் இந்தப் போட்டியில் முக்கிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. கிங்ஃபிஷர் அல்ட்ரா பீர், லாகர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று, இந்தியாவிலிருந்து சிறந்த பீர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றது. அதேபோல், கிங்ஃபிஷர் ஸ்ட்ராங் பருவகாலப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், கிங்ஃபிஷர் ப்ரீமியம் லாகர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், கிங்ஃபிஷர் அல்ட்ரா மேக்ஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளன.
சிம்பா
நடுவர்களைக் கவர்ந்த சிம்பா
இதேபோல், மற்றொரு இந்திய நிறுவனமான சிம்பாவும் சர்வதேச நடுவர்களைக் கவர்ந்துள்ளது. ஆரஞ்சு தோல் மற்றும் மல்லி விதைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட, பெல்ஜிய பாணியிலான சிம்பா விட் பீர் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றது. சாக்லேட் மற்றும் காபி சுவையுடன் கூடிய சிம்பா ஸ்டௌட் பீர் வெண்கலப் பதக்கத்தை வென்றது. இந்த விருதுகள், பாரம்பரியமாக நீண்டகாலமாக இயங்கி வரும் சர்வதேச பீர் நிறுவனங்களுக்கு இணையாக இந்திய நிறுவனங்களும் உயர்ந்துள்ளன என்பதைக் காட்டுகிறது. கண்மூடித்தனமான சோதனைகள் மூலம் தரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் இந்த விருதுகள், இந்திய மதுபானத் துறையின் தரம் உயர்ந்துள்ளதற்கான சான்றாகக் கருதப்படுகின்றன. இந்த வெற்றி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் இந்திய பீர் வகைகளின் நற்பெயரை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.