கனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைத்த காலிஸ்தானிகள்
கனடாவின் மிசிசாகாவில் கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தை, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சீர்குலைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. வெஸ்ட்வுட் மாலின் வாகன நிறுத்துமிடத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தை, காலிஸ்தான் பிரிவினைவாதிகள், "காலிஸ்தான் ஜிந்தாபாத்" கோஷமிட்டும், தீபாவளியைக் கொண்டாடும் இந்தியர்கள் மீது குப்பைகள் மற்றும் கற்களை வீசியும் தாக்குதல் நடத்துகின்றனர். தற்போது வைரலாகி வரும் வீடியோவில், காலிஸ்தான் கொடியுடன் கோஷம் எழுப்பும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது பதிவாகியுள்ளது. காவல்துறையின் இந்த மெத்தன போக்கை சில உள்ளூர் அரசியல்வாதிகள் கண்டித்துள்ளனர். வார்டு 5 மிசிசாகா நகரத்தின் கரோலின் பாரிஷ் கவுன்சிலர், "பீல் பிராந்திய காவல்துறையின் மிகவும் மோசமான எதிர்வினையை" கண்டித்துள்ளார்.
காவல்துறையை கண்டித்த உள்ளூர் அரசியல் தலைவர்கள்
கடந்தாண்டு தீபாவளி கொண்டாட்டங்களை சீர்குலைத்த காலிஸ்தானிகள்
கடந்த ஆண்டும் மிசிசாகா நகரில் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டங்களை, காலஸ்தானிகள் சீர்குலைத்தனர். சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்தியர்களும் கடுமையான கோஷங்களை இட்டு மோதிக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்நாட்டில் இயங்கும் சில உள்ளூர் ஊடகங்கள், இச்சம்பவம் மால்டன் பகுதியில் நடைபெற்றதாக கூறியுள்ளது. மேலும் அந்த வீடியோவில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் 'ராஜ் கரேகா கல்சா' என கோஷம் எழுப்புவதையும், இந்தியர்கள் 'காலிஸ்தான் முர்தாபாத்' என கோஷம் எழுப்புவதையும் பார்க்க முடிந்தது.
கனடாவில் அதிகரித்து வரும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்
கனடாவில் சமீப காலமாக வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை, கனடாவில் குறைந்தது 10 கோயில்கள் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கனடாவில் அதிகரித்து வரும், வழிபாட்டுத் தலங்கள் மீது தான் தாக்குதல்கள் மற்றும் வெறுப்பு குற்றங்கள் குறித்த, தனது கவலைகளை கனடாவிடம் இந்தியா, சமீபத்தில் பதிவு செய்திருந்தது. காலிஸ்தானி ஆதவாளரான நிஜார் கொல்லப்பட்டதற்கு, இந்தியாவிற்கு தொடர்பு உள்ளதாக, கடந்த செப்டம்பர் மாதம் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதை தொடர்ந்து இருநாட்டு உறவில் விரிசில் ஏற்பட்டது. கனடாவில், இந்தியர்களுக்கு எதிராக தொடர்ந்து நடத்தப்படும் வன்முறை சம்பவங்களால், இருநாட்டு உறவுகள் மேலும் மோசமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.