சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை வெளியிட்டதால் கனடா பள்ளியில் நடத்தப்பட இருந்த காலிஸ்தான் நிகழ்ச்சி ரத்து
கனேடிய அதிகாரிகள் பொதுப் பள்ளியில் 'காலிஸ்தான் வாக்கெடுப்பு' நடத்த அனுமதிக்க மறுத்ததால், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரில் இருக்கும் தமனாவிஸ் மேல்நிலைப் பள்ளியில் செப்டம்பர் 10ஆம் தேதி 'காலிஸ்தான் வாக்கெடுப்பு' நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், இது குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கும் சர்ரே மாவட்ட பள்ளி வாரியத்தின் செய்தித் தொடர்பாளர், "எங்கள் வாடகை ஒப்பந்தத்தை மீறியதால் எங்கள் பள்ளியில் நடக்க இருந்த சமூக நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார். இந்த நிகழ்விற்கு வெளியிடப்பட்ட விளம்பர சுவரொட்டிகளில் ஆயுதத்தின் படங்களுடன் பள்ளியின் படங்களும் இடம்பெற்றிருந்தன. இதனாலேயே இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
பள்ளியில் ஒட்டப்பட்டிருந்த பயங்கரவாதிகள் மற்றும் ஆயுதங்களின் போஸ்டர்கள்
காலிஸ்தான் வாக்கெடுப்புக்கான சுவரொட்டியில் AK-47 இயந்திர துப்பாக்கி மற்றும் கிர்பான் ஆகிய இரண்டும் இடம்பெற்றிருந்தன. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. "பிரச்சினையைத் தீர்க்க பலமுறை முயற்சித்த போதிலும், இந்த படங்களை அகற்ற அவர்கள் தவறிவிட்டனர்" என்று சர்ரே மாவட்ட பள்ளி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஜூன் 23, 1985இல் 329 உயிர்களைக் கொன்ற பயங்கரவாத குண்டுவெடிப்பு ஏர் இந்தியா விமானத்தின் மீது நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத குடுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தல்விந்தர் சிங் பர்மார் என்பவரின் போஸ்டர்களும் சர்ரே மாவட்ட பள்ளியில் ஒட்டப்பட்டிருந்தன. இதனால் கடந்த வாரம், கனடாவில் வாழும் இந்தியர்கள் 'காலிஸ்தான் வாக்கெடுப்பு' நிகழ்ச்சிக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.