மின் கழிவுகளை ரோபோடிக் கையாக மாற்றிய கென்ய கண்டுபிடிப்பாளர்கள்
எலக்ட்ரானிக் ஸ்கிராப்பில் இருந்து ஒரு பயோ-ரோபோடிக் கையை உருவாக்கி இரு கென்ய கண்டுபிடிப்பாளர்கள் அசத்தியுள்ளனர். மோசஸ் கியூனா(29) மற்றும் டேவிட் காத்து(30) ஆகியோர், 2012ஆம் ஆண்டிலேயே இது போன்ற ஒரு செயற்கையான கையை உருவாக்கி இருக்கின்றனர். இந்த செயற்கையான ரோபோடிக் கை, தொழில்துறை விபத்தில் ஒரு மூட்டை இழந்த அவர்களது பக்கத்து வீட்டுக்காரருகாக உருவாக்கப்பட்டதாகும். எனினும், அவர்களது புதிய கண்டுபிடிப்பு அதிலேயே மேம்படுத்தப்பட்ட சில அமைப்புகளை கொண்டுள்ளதாக இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்கையான கை, மூளையுடன் தொடர்பு கொண்டு தானாகவே அசையும் குணம் கொண்டதாகும்.
மூளை சமிக்ஞைகளை கைக்கு கட்டளையாக அனுப்பும் செயற்கையான கை
மூளை சமிக்ஞைகளை எடுத்து அவற்றை மின்னோட்டமாக மாற்ற இந்த சாதனம் ஹெட்செட் ரிசீவரைப் பயன்படுத்துகிறது. பின்னர் அந்த சமிக்ஞைகள் ஒரு டிரான்ஸ்மிட்டருக்கு அனுப்பப்படுகிறது. அது வயர்லெஸ் முறையில் அதன் கட்டளைகளை செயற்கையான கைக்கு அனுப்புகிறது. பின், இந்த கட்டளைகளை செயல்படுத்த தூண்டுகிறது. இவையெல்லாம் இரண்டு நொடிகளுக்குள் நடந்துவிடுகின்றன. "மாற்றுத்திறனாளிகள் பல போராட்டங்களைச் சந்திக்கின்றனர். அவர்களை மிகவும் திறமையானவர்களாக மாற்ற நாங்கள் விரும்பினோம்" என்று காது AFPஇடம் கூறியுள்ளார். பக்கத்து வீட்டுக்காரருக்கு அவர்கள் செய்து கொடுத்த பிரத்யேகமான செயற்கையான கை, அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கியூனா கூறியுள்ளார். செயற்கைக் கருவிகள் அதிக விலையில் விற்கப்படுவதால், 10ல் ஒரு மாற்றுத்திறனாளி மட்டுமே இது போன்ற கருவிகளை பயன்படுத்த முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.