ஆறு மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக பொது மக்களை சந்தித்தார் இளவரசி கேட் மிடில்டன்
லண்டனில் சனிக்கிழமை நடைபெற்ற ட்ரூப்பிங் தி கலர் 2024 நிகழ்வில் கேட் மிடில்டன் கலந்து கொண்டார். கடந்த ஆறு மாதங்களில் அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுவாகும். மக்கள் மத்தியில் தோன்றிய வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், கறுப்பு-வெள்ளை கோட் உடை அணிந்துகொண்டு தனது குழந்தைகளான இளவரசர் ஜார்ஜ்(10) இளவரசி சார்லோட்(9), மற்றும் இளவரசர் லூயிஸ்(6) ஆகியோருடன் மன்னன் மூன்றாம் சார்லஸின் பிறந்தநாள் அணிவகுப்பில் கலந்து கொண்டார். அவர் கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் ஒரு தேவாலய சேவையில் கலந்து கொண்டார். அதன் பிறகு, அவர் எந்த பொது நிகழ்விலும் கலந்து கொள்ளவில்லை. இதனால், அவர் உயிரிழந்துவிட்டதாக வதந்திகள் கிளம்பின. இதற்கிடையில், ஒரு அறிக்கையை வெளியிட்ட அவர், தனக்கு புற்றுநோய் இருப்பதாக அறிவித்தார்.
தனது குழந்தைகளுடன் இளவரசி கேட் மிடில்டன்
புற்றுநோய் பயணம் குறித்த தனிப்பட்ட செய்தியை பகிர்ந்துகொண்ட மிடில்டன்
கடந்த மார்ச் மாதம், தனது புற்றுநோய் குறித்த தகவலை வெளியிட்ட இளவரசி கேட் மிடில்டன், அதற்கு பிறகு மக்களிடம் இருந்து தனக்கு கிடைத்த ஆதரவுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். "கடந்த இரண்டு மாதங்களில் எனக்கு அனுப்பப்பட்ட அனைத்து வகையான ஆதரவு மற்றும் ஊக்கமளிக்கும் செய்திகளால் நான் இன்ப அதிர்ச்சியடைந்தேன்." என்று இளவரசி கேட் மிடில்டன் கூறியுள்ளார். மேலும், புற்றுநோய்க்காக செய்யப்படும் கீமோதெரபியில் தனது தொடர் சிகிச்சை மற்றும் அனுபவம் குறித்து அவர் மக்களுடன் பகிர்ந்து கொண்டார். அவரது புற்றுநோயைப் பற்றிய கூடுதல் விவரங்களை அரண்மனை வெளியிடவில்லை.