எல்போகேட் முதல் ஜி20 பயணம் வரை: சர்ச்சைகளில் சிக்கும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று அதிகாலை இந்தியாவுடனான உறவை பலவீனப்படுத்தும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பு தற்போது சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. ஒரு காலிஸ்தான் பயங்கரவாதியின் கொலையை காரணம் காட்டி, ஒட்டாவாவில் உள்ள புது டெல்லியின் உளவுத்துறைத் தலைவரை வெளியேற்றினார் ஜஸ்டின். இந்த கொலையில், இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்யும் "நம்பகமான குற்றச்சாட்டுகள்" இருப்பதாக கனட நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஜஸ்டின் ட்ரூடோ அவ்வப்போது இதுபோன்ற சர்ச்சைக்குரிய நிகழ்வுகளிலும், கருத்துக்களை கூறுவதிலும் பிரபலம். அதற்கு சான்றாக சில தருணங்கள்:
G20 மாநாட்டில் பதற்றம்
ஏற்கனவே, காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க கனடா நடவடிக்கை எடுக்காதது குறித்து இந்தியா வருத்தம் தெரிவித்திருந்த நேரத்தில், ஜஸ்டின் ட்ரூடோ, செப்டம்பர் 9 அன்று, டெல்லியில் G20 தலைவர்களுக்கான இரவு விருந்தைத் தவிர்த்தார். பிரதமர் நரேந்திர மோடியுடனான பேச்சுக்கள் கூட ஆக்கபூர்வமாக இல்லை. எனினும், அந்த சந்திப்பின் போதும், காலிஸ்தானி எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கனடா செயல்படாதது குறித்து இந்தியா கவலையை எழுப்பியது. இந்த நிலையில், ஜஸ்டின் நாடு திரும்புவதில் சிக்கல் நீடித்தது. அவரின் விமானம் கோளாறு ஆனதால் இந்த தாமதம் ஏற்பட்ட நிலையில், இந்தியா தனது ராணுவ விமானத்தை தர முன்வந்தது. அதையும் அவர் மறுத்துவிட்டார்.
2018 இந்திய பயணம்
2018 ஆம் ஆண்டு, ஜஸ்டின் தனது குடும்பத்தாரோடு இந்தியாவிற்கு வந்த போது, இந்தியா பாரம்பரியத்தை பிரதிபலிப்பதாக எண்ணி, அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளின் போது, சம்மந்தமற்ற, அதே நேரத்தில் விலை உயர்ந்த இந்திய ஆடைகளை அணிந்து வந்ததற்காக, சமூக ஊடகங்களில் கேலிக்கு ஆளானார். 1986-ஆம் ஆண்டு கனடாவுக்குச் சென்ற பஞ்சாப் அமைச்சர் ஒருவரைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜஸ்பால் அத்வால் என்பவருக்கு, டெல்லியில் ட்ரூடோவுக்கு வழங்கப்பட தனிப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பு விடப்பட்டது தொடர்பாக, அதே பயணத்தின் போது சர்ச்சையில் சிக்கினார் ஜஸ்டின்.
இந்தியாவிற்கு அதிகாரபூர்வ பயணமா? சுற்றுலா பயணமா?
இந்தியாவிற்கு விஜயம் செய்த போது, உத்தியோகபூர்வ கூட்டங்களை விட, ட்ரூடோ அதிக நேரம் சுற்றிப்பார்ப்பதற்காக ஒதுக்குகிறார் என விமர்சிக்கப்பட்டார். தன்னுடைய நாட்டில் உள்ள சீக்கிய வாக்காளர்களை கவர்வதற்காகவே இதை செய்கிறார் என குற்றம் சாட்டப்பட்டது. விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு 2020 ஆம் ஆண்டில், புதிய விவசாயச் சட்டங்கள் தொடர்பாக இந்தியாவில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கவலை தெரிவித்த ட்ரூடோ, அமைதியான போராட்டத்தின் மூலம் உரிமையைப் பாதுகாக்க, தனது நாடு எப்போதும் துணை நிற்கும் என்றார். அவருடைய அந்த கருத்து, தேவை இல்லாமல் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது போல பார்க்கப்பட்டது
நெறிமுறைகள் வரிசையில் முதல் கனடிய பிரதமர்
கனடாவின் நெறிமுறைகள் கண்காணிப்பு குழு 2019 இல், ட்ரூடோவின் குழு விதிகளை மீறியதாக அறிவித்தது. இந்த குழுக்களின் குற்றச்சாட்டுகளுக்கு ட்ரூடோ முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் எனினும் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். நெறிமுறைகள் கண்காணிப்பு குழுவால் குற்றம் சுமத்தப்பட்ட முதல் பிரதமர் ஜஸ்டின் தான். பில்லியனர் ஆகா கானுக்கு சொந்தமான ஒரு தனியார் தீவில் ட்ரூடோ தன்னுடைய குடும்பத்தாருடன் விடுமுறையை கொண்டாடியது சர்ச்சையானது. ஆகா கானின் அறக்கட்டளை, ட்ரூடோ மற்றும் அவரது அதிகாரிளுக்கு, லாபி செய்ய பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. "எல்போகேட்" : ட்ரூடோ, தற்செயலாக ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினரை முழங்கையால் அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். "எல்போகேட்" என கூறப்பட்ட அந்த நிகழ்ச்சி, அவரின் மேல் அழியாத களங்கத்தை ஏற்படுத்தியது எனக்கூறலாம்.