மூன்றே மாதங்களில் நாடாளுமன்றம் கலைப்பு! ஜப்பான் பிரதமர் சானே தகாச்சியின் மாஸ்டர் பிளான்
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் முதல் பெண் பிரதமராக கடந்த அக்டோபர் மாதம் பதவியேற்ற சானே தகாச்சி, நாட்டின் நாடாளுமன்றத்தை கலைத்து இன்று உத்தரவிட்டார். ஜப்பான் நாடாளுமன்ற சபாநாயகர் புகுஷிரோ நுகாகா இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாசித்தார். இதையடுத்து, வருகிற பிப்ரவரி 8-ஆம் தேதி ஜப்பானில் இடைத்தேர்தல் (Snap Election) நடைபெற உள்ளது. 64 வயதான சானே தகாச்சி, தற்போது 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் ஆதரவுடன் செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்கிறார். இந்த மக்கள் ஆதரவை வாக்குகளாக மாற்றி, நாடாளுமன்றத்தில் தனது லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) மற்றும் ஜப்பான் இன்னோவேஷன் கட்சி (JIP) கூட்டணியின் பெரும்பான்மையை வலுப்படுத்தவே அவர் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.
சூழல்
சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழல்
இந்தத் தேர்தல் அறிவிப்பு ஜப்பானில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, தைவான் விவகாரத்தில் சீனா ராணுவ நடவடிக்கை எடுத்தால் ஜப்பான் தலையிடும் எனத் தகாச்சி சமீபத்தில் கூறியிருந்தார். இது சீனாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஜப்பானை அதிக அளவில் ஆயுதங்களை வாங்குமாறு அழுத்தம் கொடுத்து வரும் சூழலில், இந்தத் தேர்தல் தகாச்சியின் வெளியுறவு கொள்கைகளுக்கு ஒரு முக்கியச் சோதனையாக அமையும். எதிர்க்கட்சிகள் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக தேர்தலை முன்னதாக நடத்துவது பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்கும் என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.