'குறிப்பிட்ட தகவல்' அளித்தால் நிஜ்ஜார் கொலையில் நடவடிக்கை எடுக்கப்படும்: ஜெய்சங்கர் உறுதி
கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் காலிஸ்தானி பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது குறித்து கனடாவில் இருந்து குறிப்பிட்ட தகவல்களை ஆய்வு செய்ய இந்தியா தயாராக உள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர், எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நடந்த "வெளிநாட்டு உறவுகள் கவுன்சில் விவாதத்தில்" பேசிய அவர், கனடாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் இந்திய தூதர்களுக்கு அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. ஜூன் 18 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கம் ஈடுபட்டதாக செப்டம்பர்-18 அன்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டி இருந்தார். அதன் தொடர்ச்சியாக இருநாட்டு உறவும் அதளபாதாளத்தில் வீழ்ந்தது. தொடர்ந்து, கனேடியர்களுக்கான விசா சேவைகளை புது தில்லி நிறுத்தி வைத்தது.
உறுதியான ஆதாரங்களை கேட்கும் இந்தியா
இதனை தொடர்ந்து ஐநா சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்கா சென்ற போது தான் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது இந்தியாவின் "கொள்கை" அல்ல என்று இந்திய அரசாங்கம், கனேடிய அரசாங்கத்திடம் தெரிவித்ததாக கூறிய ஜெய்சங்கர், நிஜ்ஜாரின் மரணம் குறித்து கனடாவிடம் குறிப்பிட்ட தகவல்கள் இருந்தால் இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். மேலும், ஜெய்சங்கர், இந்திய தூதர்களுக்கு அச்சுறுத்தல், இந்திய தூதரகங்கள் மீதான தாக்குதல்கள் குறித்து கவலைகளை எழுப்பினார். அரசியல் காரணங்களுக்காக இந்த சம்பவங்கள் "பரவலாக அனுமதிக்கப்படுகின்றன" என்று கூறினார். மறுபுறம் கனடாவோ, நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளின் பங்கு பற்றிய ஆதாரங்களை கனடா பல வாரங்களுக்கு முன்பு இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ளது