"இஸ்லாமும் ஐரோப்பாவும் இணக்கப் பிரச்சனையைக் கொண்டுள்ளன": இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி
இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் ஐரோப்பிய நாகரிகத்தின் மதிப்புகள் மற்றும் உரிமைகள், இரண்டிற்கும் இணக்க பிரச்னைகள் உள்ளது என்று இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறியுள்ளார். மெலோனி இந்த சர்ச்சைக்குரிய கருத்தை, அவரது வலதுசாரி, தீவிர பழமைவாத 'பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி' கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. "இஸ்லாமிய கலாச்சாரம் அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தினை பற்றிய ஒரு குறிப்பிட்ட விளக்கமும், நமது நாகரிகத்தின் உரிமைகள் மற்றும் மதிப்புகளுடன் ஒன்றிப்போகாத பிரச்சனை இருப்பதாக நான் நம்புகிறேன்," என அவர் கூறினார்.
ஷரியா சட்டத்தை விமர்சித்த இத்தாலிய பிரதமர்
இத்தாலிய பிரதமர் மேலும், "இத்தாலியில் உள்ள பெரும்பாலான இஸ்லாமிய கலாச்சார மையங்கள் சவூதி அரேபியாவால் நிதியளிக்கப்படுகின்றன என்பதனையும் நான் மறக்கவில்லை" எனக்கூறியுள்ளார். அதோடு, அவர் சவூதி அரேபியாவின் கடுமையான ஷரியா சட்டத்தையும் விமர்சித்தார், அதன் கீழ் விசுவாசதுரோகம் மற்றும் ஓரினச்சேர்க்கை கிரிமினல் குற்றங்கள் என குறிப்பிடப்படுவதை அவர் விமர்சித்துள்ளார். ஷரியா சட்டம் என்பது பொதுவாக இஸ்லாமிய சட்டம் என்று குறிப்பிடப்படுகிறது. இது குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் வேரூன்றிய கொள்கைகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் தொகுப்பாகும்.