காசா சுரங்கப்பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் திட்டம்
காசாவில் உள்ள சுரங்க பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்தி, ஹமாஸ் போராளிகளை வெளியில் இழுக்கும் முயற்சியில் ஈடுபட, அங்கு பெரிய அளவிலான மோட்டார்களை இஸ்ரேல் பொருத்தியுள்ளதாக, அமெரிக்க அதிகாரிகளின் தகவலை மேற்கோள்காட்டி, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. அல்-ஷாதி அகதிகள் முகாமின் வடக்கே, ஒரு மணி நேரத்தில் பல ஆயிரக்கணக்கான கியூபிக் லிட்டர் தண்ணீரை சுரங்கங்களுக்குள் செலுத்தும் வகையில், கடந்த நவம்பர் மாதமே இஸ்ரேல் 5 மோட்டார்களை பொருத்திவிட்டதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து பணய கைதிகள் விடுவிக்கப்படும் முன்னரே, இந்த திட்டத்தை இஸ்ரேல் செயல்படுத்துமா என்பது இன்னும் தெரியவில்லை என அந்த செய்தி கூறுகிறது.
பணய கைதிகளை சுரங்கங்களில் வைத்துள்ள ஹமாஸ்
ஹமாஸ் முன்னர் பணய கைதிகளை, "பாதுகாப்பான இடங்கள்" மற்றும் "சுரங்கங்களில்" வைத்துள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி குறித்து ஒரு அமெரிக்க அதிகாரியிடம் கேட்கப்பட்ட போது, இஸ்ரேல் ஹமாசின் சுரங்கங்களை செயல் இழக்க செய்ய, பல்வேறு வழிகளை யோசித்து வருவதாக தெரிவித்தார். இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம், இது குறித்து எந்த விதமான கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டது. இது குறித்த வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கேள்விக்கு, "பல்வேறு இராணுவ மற்றும் தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி, பல்வேறு வழிகளில் ஹமாஸின் பயங்கரவாதத் திறன்களை சிதைக்க இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்(IDF) செயல்பட்டு வருகிறது" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.