Page Loader
24 மணிநேர கெடு: 11 லட்சம் காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலால் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர். மேலும் இஸ்ரேல் காஸாவுக்கு உணவு, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை துண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

24 மணிநேர கெடு: 11 லட்சம் காஸா மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு

எழுதியவர் Srinath r
Oct 13, 2023
12:39 pm

செய்தி முன்னோட்டம்

காஸா பகுதிக்கு வடக்கில் வாழும் அனைவரையும் தெற்கு நோக்கி, 24 மணி நேரத்தில் வெளியேற, இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளதாக ஐநா சபை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஐநா சபை அளித்துள்ள தகவலின் படி, வடக்கு காசா பகுதியில், காஸா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர், சுமார் 11 லட்சம் பேர் வாழ்வதாக தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐநா சபை, "மிகப்பெரிய மனித இழப்புகள் ஏற்படாமல், அத்தகைய இடம் பெயர்தல் சாத்தியமில்லை என ஐநா கருதுகிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இஸ்ரேல் அரசு, காஸாவில் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், இஸ்ரேலிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2nd card

வெளியேற்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தும் ஐநா

ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இஸ்ரேல் அரசின் இந்த உத்தரவு உண்மையானதாக இருந்தால், அது ஏற்கனவே மோசமாக உள்ள சூழ்நிலையை பேரழிவாக்கும். அதனால் அத்தகைய உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. காஸாவில் உள்ள ஐநா அதிகாரிகளிடம் இஸ்ரேல் ராணுவத்தின் தொடர்பு அதிகாரிகள் இந்த உத்தரவு குறித்து எடுத்துரைத்தனர். மேலும் அந்த உத்தரவில் ஐநாவின் பள்ளிகள், சுகாதார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் அடைக்கலம் பெற்ற நபர்களும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

3rd card

ஐநாவின் அறிக்கையை கண்டித்துள்ள இஸ்ரேல் தூதர்

வெளியேற்ற உத்தரவுக்கு எதிரான ஐநாவின் அறிக்கையை, இஸ்ரேல் தூதர் கண்டித்துள்ளார். ஐநாவின் அறிக்கை 'அவமானகரமானது' எனவும் சாடியுள்ளார். இது குறித்து இஸ்ரேலுக்கான ஐநா தூதர் கிலாட் எர்டன் கூறுகையில், இந்த வெளியேற்ற உத்தரவு, ஒரு முன்னெச்சரிக்கை எனவும், போரில் தொடர்பில்லாத நபர்கள் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்படுவது இதன் மூலம் தடுக்கப்படும் எனவும் கூறினார். மேலும் அவர், "பல ஆண்டுகளாக ஹமாஸ் ஆயுதங்கள் பெறுவதையும், காஸாவில் உள்ள மக்களையும், அவர்களது வீடுகளையும் மறைவிடமாக பயன்படுத்தி வருவதையும் ஐநா கண்டும் காணாமல் இருந்து வந்தது." "தற்போது ஹமாஸ் தீவிரவாதிகளால் தாக்கப்படும் இஸ்ரேல் பக்கம் நிற்பதை விட்டுவிட்டு, இஸ்ரேலுக்கு ஐநா பாடம் எடுத்துக் கொண்டிருக்கிறது" என கண்டித்தார்.

4th card

காஸா மக்களை வெளியேற நேரடியாக உத்தரவிட்ட இஸ்ரேல் ராணுவம்

தற்போது இஸ்ரேல் ராணுவம். காஸா மக்கள் வெளியேற நேரடியாக உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில், "உங்கள் பாதுகாப்புக்காகவும், உங்கள் குடும்பங்களின் பாதுகாப்பிற்காகவும், உங்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் ஹமாஸ் பயங்கரவாதிகளிடமிருந்து நீங்கள் விலகி இருங்கள்" என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில், "வரக்கூடிய நாட்களில் ஐடிஎப்(இஸ்ரேல் பாதுகாப்பு படைகள்) காஸா பகுதியில் தாக்குதல் நடத்தும். அதேசமயம் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க விரிவான முயற்சிகள் எடுக்கப்படும்" எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது

ட்விட்டர் அஞ்சல்

இஸ்ரேல் காஸாவில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தாக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.