"யாராக இருந்தாலும் விடமாட்டோம்!": கமேனியின் வாரிசுக்கும் குறிவைத்த இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்குப் பின் பதவியேற்கும் எவரும் இஸ்ரேலின் இலக்காகவே இருப்பார்கள் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில் 86 வயதான கமேனி கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கமேனியின் உடல் அவரது சொந்த ஊரான மஷாத் நகரில் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்காக ஈரானில் மூன்று நாள் அரசுமுறை துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை
இஸ்ரேலின் எச்சரிக்கை
கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அடுத்த உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட இஸ்ரேல் அமைச்சர் காட்ஸ், "இஸ்ரேலை அழிக்க நினைக்கும் ஈரான் பயங்கரவாத ஆட்சியின் அடுத்த தலைவர் யாராக இருந்தாலும், அவர் எங்கு ஒளிந்திருந்தாலும் இஸ்ரேலின் இலக்காகவே இருப்பார்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஆபரேஷன் லயன்ஸ் ரோர்" மூலம் ஈரான் ஆட்சியின் வலிமையை முழுமையாக தகர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் 'நிபுணர்கள் குழு' கூடியிருந்த கோம் நகரில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. ஈரான் அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்புகள் ரகசியமான முறையில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.