ஹிஸ்புல்லா மீதான போரை 21 நாட்கள் நிறுத்துவதற்கான முன்மொழிவை நிராகரித்தது இஸ்ரேல்
இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் வியாழனன்று (செப்டம்பர் 26) ஹிஸ்புல்லாவுடன் போர்நிறுத்தம் செய்வதற்கான முன்மொழிவுகளை நிராகரித்தார். முன்னதாக அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல்வேறு அரபு நாடுகள் சேர்ந்து 21 நாள் இடைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த நிலையில், அதை நிராகரிப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அமைச்சர் காட்ஸ் இதுகுறித்து கூறுகையில், "வடக்கில் போர்நிறுத்தம் இருக்காது. ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்புக்கு எதிராக தொடர்ந்து வெற்றி பெற்று வடக்கில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குத் திரும்பும் வரை எங்கள் முழு பலத்துடன் போராடுவோம்." என்று கூறினார். இதற்கிடையே, இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் லெபனானில் ஏறக்குறைய 630 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புதன்கிழமை மேலும் 72 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் அறிவித்தது.
போர் நிறுத்தத்திற்கான முயற்சிகள்
சவூதி அரேபியா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆதரவுடன் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் முன்மொழிந்த இந்த போர்நிறுத்தம், இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கான இடத்தை உருவாக்குவதற்கும், பரந்த மத்திய கிழக்கு பிராந்திய மோதலின் அபாயத்தைக் குறைப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது. அந்த நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், "இராஜதந்திரத்திற்கு இடமளிக்கும் வகையில் லெபனான்-இஸ்ரேல் எல்லையில் 21 நாள் போர்நிறுத்தத்திற்கு உடனடியாக அழைப்பு விடுக்கிறோம்." எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய மோதல் சகிக்க முடியாததாக மாறியுள்ளது மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதையும் அது எடுத்துக்காட்டுகிறது.
ஐநா சபையில் போர் நிறுத்தத்திற்கு லெபனான் வலியுறுத்தல்
புதனன்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், லெபனான் பிரதமர் நஜிப் மிகாட்டி போர்நிறுத்தத்தை வலியுறுத்தி, எல்லா ஆக்கிரமிக்கப்பட்ட லெபனான் பிரதேசங்களில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கு உத்தரவாதம் அளிக்குமாறு சபையை வலியுறுத்தினார். பிராந்தியத்தில் தீவிரத்தை குறைக்க வலியுறுத்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ஒரு முழுமையான போர் சாத்தியம் என்று எச்சரித்தார். ஆனால் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையிலான போர்நிறுத்தம் முழு பிராந்தியத்தையும் அடிப்படையில் மாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை ஐநா சபையில் பேசவிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் நிறுத்த முன்மொழிவிற்கு தான் இன்னும் பதிலளிக்கவில்லை என்றும், தொடர்ந்து சண்டையிடுமாறு ராணுவத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.