இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்; வெட்கக்கேடானது என காட்டமாக வர்ணித்த இஸ்ரேலிய பிரதமர்
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் காசாவில் பயன்படுத்துவதற்காக, இஸ்ரேலுக்கு வழங்கப்பட்டு வரும் ஆயுத விநியோகத்தை நிறுத்துமாறு சனிக்கிழமை (அக்டோபர் 5) அழைப்பு விடுத்தார். இதற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் எதிர்வினையாற்றியுள்ளார். முன்னதாக, லெபனானில் தரைவழியாக இஸ்ரேல் ராணுவம் படைகளை அனுப்பும் முடிவிற்கும் நெதன்யாகுவை மேக்ரான் கடுமையாக விமர்சித்தார். அவர் இதுகுறித்து பிரான்ஸ் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இன்று, நாம் ஒரு அரசியல் தீர்வுக்குத் திரும்புவதே முன்னுரிமை என்று நான் நினைக்கிறேன். காசாவில் போரிடுவதற்கு ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துகிறோம்." என்று கூறினார். செவ்வாயன்று பதிவு செய்யப்பட்ட இந்த நேர்காணலின் போது பிரான்ஸ் தற்போது எதையும் வழங்கவில்லை என்று அவர் கூறினார்.
போர்நிறுத்தத்தை புறக்கணிக்கும் இஸ்ரேலுக்கு பதிலடி
போர்நிறுத்தத்திற்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் காசாவில் தொடர்ந்து வரும் மோதல்கள் குறித்த தனது கவலையை மேக்ரான் மீண்டும் வெளிப்படுத்தினார். "எங்களுடைய குரல் கேட்கப்படவில்லை என்று நான் நினைக்கிறேன். இது இஸ்ரேலின் பாதுகாப்பு உட்பட ஒரு மிகப்பெரிய தவறு என்று நான் நினைக்கிறேன்." என்று அவர் மேலும் கூறினார். எனினும், இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரான் தலைமையிலான காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிராக இஸ்ரேல் போரிடுகையில், அனைத்து நாகரிக நாடுகளும் இஸ்ரேலின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேக்ரான் மற்றும் பிற மேற்கத்திய தலைவர்கள் இப்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுத்துள்ளது வெட்கக்கேடானது என அவர் மேலும் கூறினார்.