தெற்கு லெபனானில் சக்திவாய்ந்த வெடிப்பு: 1,100 டன் வெடிமருந்துகளால் உருவான செயற்கை நிலநடுக்கம்
செய்தி முன்னோட்டம்
தெற்கு லெபனானில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா அமைப்பின் பிரம்மாண்டமான நிலத்தடி கட்டமைப்பு ஒன்றைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய மாபெரும் வெடிமருந்து தாக்குதல், அப்பகுதியில் 4.1 ரிக்டர் அளவிலான செயற்கை நிலநடுக்கத்தை உருவாக்கியுள்ளது. அலி அல்-தாஹிர் மலைத்தொடருக்கு அடியில் அமைந்துள்ள இந்த நிலத்தடி மையத்தை அழிக்க, சுமார் 1,100 டன் வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டு ஒரே நேரத்தில் தகர்க்கப்பட்டன. நபாதியே பகுதிக்கு அருகே பதிவான இந்த அதிர்வு, பூமிக்கு அடியில் இயற்கை நில அதிர்வால் ஏற்பட்டதல்ல; மேல்பரப்பில் நடத்தப்பட்ட மிக சக்திவாய்ந்த வெடிப்பினால் உண்டான செயற்கை அதிர்வே என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) மற்றும் லெபனான் நில அதிர்வு மையம் ஆகியவை உறுதிப்படுத்தியுள்ளன.
விவரங்கள்
40 கி.மீ தூரம் வரை அதிர்வு
இரவு நேரத்தில் நடந்த இத்தாக்குதலில் எழுந்த பிரம்மாண்ட தீப்பிழம்பு வானத்தை வெளிச்சமாக்கியது.
தாக்குதல் நடந்த இடத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சைடான் (Sidon) நகரம் வரையிலுள்ள மக்கள் நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக ஈரானிய நிதியுதவியுடன் கட்டப்பட்ட இந்த நிலத்தடி கட்டமைப்பு, ஹிஸ்புல்லாவின் 'பத்ர்' பிரிவின் முதன்மை கட்டுப்பாட்டு மையமாக செயல்பட்டு வந்தது.
இதில் 8 முக்கிய வழிகள், ஆயுதக் கிடங்குகள், ராக்கெட் ஏவுதளங்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்களை ஏவும் வசதிகள் இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
பதற்றம்
சர்வதேச பதற்றம்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், தெற்கு லெபனானில் பாதுகாப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த பிரம்மாண்ட வெடிப்பு லெபனானின் 'ரூம்' நில அதிர்வு கோட்டிற்கு அருகே நடந்துள்ளதால், அப்பகுதி உள்கட்டமைப்புகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என லெபனான் அரசு கவலை தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.