லெபனான், சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல்: பல நாட்டு போர் வெடிக்க வாய்ப்பு
சிரியாவிலிருந்து இஸ்ரேலிய எல்லைக்குள் பல ராக்கெட்டுகள் ஏவப்பட்டது அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலின் வடக்கு எல்லையில் உள்ள, அதாவது லெபனான்-இஸ்ரேல் எல்லைக்கு அருகே உள்ள அவிவிம் என்ற கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் இஸ்ரேல் இராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் 5வது நாளாக தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாலஸ்தீனியர்கள் வாழும் காசா பகுதியின் எல்லைகளை காப்பாற்றியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் ஹமாஸ் தற்போது லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் இணைந்துள்ளது.
பெரும் திட்டத்துடன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறதா ஹமாஸ்?
மே-2021 போரின் போது லெபனான், சிரியா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட, பஸ்கா விடுமுறையின் போது, இஸ்ரேல் மீது லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதள் நடத்தப்பட்டன. ஜெனின்(மேற்குக்கரை) பகுதியில் இருந்தும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுவரை இஸ்ரேலின் வடக்கு எல்லையில் சிறிய தாக்குதல்கள் மட்டுமே நடந்துள்ளன. இருப்பினும், பல நாட்டு போராக இது மாறக்கூடும் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது. ஏதோ ஒரு பெரும் திட்டத்துடன் தான் இஸ்ரேல் போரை ஹமாஸ் பயங்கரவாத குழு தொடங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேலின் சக்திவாய்ந்த எல்லை பாதுகாப்பை மீறி பயங்கரவாதிகள் அந்நாட்டுக்குள் ஊடுருவியது, பல தசாப்தங்களுக்கு பிறகு நடக்கும் மிகப்பெரும் ஊடுருவலாகும்.