LOADING...
இஸ்ரேலில் மர்ம நில அதிர்வு: டிமோனா அணுசக்தி மையத்திற்கு அருகே நிகழ்ந்தது என்ன? அணு ஆயுத சோதனையா?
இஸ்ரேலின் நெகேவ் பாலைவனப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இஸ்ரேலில் மர்ம நில அதிர்வு: டிமோனா அணுசக்தி மையத்திற்கு அருகே நிகழ்ந்தது என்ன? அணு ஆயுத சோதனையா?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 16, 2026
08:25 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள சூழலில், வியாழக்கிழமை காலை தெற்கு இஸ்ரேலின் நெகேவ்(Negev) பாலைவனப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவில் 4.2 ஆகப் பதிவான இந்த நில அதிர்வு, இஸ்ரேலின் ரகசிய அணுசக்தி மையமான டிமோனா(Dimona) பகுதிக்கு மிக அருகில் மையம் கொண்டிருந்ததே இந்த யூகங்களுக்கு முக்கிய காரணமாகும். வியாழக்கிழமை காலை 9 மணியளவில், பள்ளிகளுக்கான தேசிய அவசரகால ஒத்திகை நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் இந்த அதிர்வு உணரப்பட்டது. சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த அதிர்வு வெறும் 1.5 முதல் 2 நொடிகள் மட்டுமே நீடித்தது.

சோதனை

நிலத்திற்கு அடியில் அணு ஆயுத சோதனையாக இருக்குமோ?

வழக்கமான நிலநடுக்கங்களை போலன்றி, இதன் குறுகிய கால அளவு மற்றும் மையம் கொண்ட இடம் ஆகியவை, இது நிலக்கடியில் நடத்தப்பட்ட அணு ஆயுத சோதனையாக இருக்கலாம் என்ற விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் வழங்கும் எச்சரிக்கையாக இது இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடாத இஸ்ரேல், தனது அணுசக்தி திறன் குறித்து எப்போதும் மௌனம் காத்தே வருகிறது. இருப்பினும், இது ஒரு தற்செயலான இயற்கை நிகழ்வு என்றும், பள்ளிகளுக்கான ஒத்திகை ஏற்கனவே திட்டமிடப்பட்டது என்றும் உள்ளூர் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

Advertisement