ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு
ஈரானில் போராடும் பெண்களின் முகங்கள், கண்கள், மார்புகள் மற்றும் பிறப்புறுப்பைக் குறிவைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 13ம் தேதி மாஷா அமினி (22) என்ற இளம்பெண்ணை ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று குற்றம்சாட்டி போலீஸ் காவலில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால், பலத்த காயம் அடைந்த அவர் செப்டம்பர் 16ம் தேதி உயிரிழந்தார். இதனையடுத்து, ஈரான் முழவதும் மாபெரும் போராட்டங்கள் வெடித்தது. ஈரானிய பெண்கள் 9 வயதில் இருந்து பொதுவெளிகளில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும். இதைக் கண்காணிப்பதற்கு போலீஸ் தனிப்படையும் அமைக்கப்பட்டிருந்தது. இது போன்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே இந்த பெண்கள் போராடுகின்றனர்.
"பாதுகாப்பு" படையினர் கொடுத்த பாதுகாப்பு!
கடந்த 2 மாதங்களில் இந்த போராட்டக்காரர்கள் மேல் நடத்தப்பட்ட தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படையினர் இது போன்ற தாக்குதலை நடத்தும்போது வேண்டுமென்றே பெண்களின் முகங்கள், கண்கள், மார்புகள் மற்றும் பிறப்புறுப்பைக் குறிவைத்து தாக்கி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை அளித்த ஒரு டாக்டர், "நான் சிகிச்சை அளித்த 20 வயது இளம்பெண்ணின் பிறப்புறுப்பில் 2 பால்ரஸ் குண்டுகளும், தொடையில் 10 குண்டுகளும் பாய்ந்திருந்தது. 10 குண்டுகளை எடுத்த எங்களால் பிறப்புறுப்பில் ஆழமாக பாய்ந்திருந்த 2 குண்டுகளை எடுக்க முடியவில்லை" என்று வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதே போல், போராட்டதில் கலந்து கொண்ட ஆண்கள் மீதும் குறிப்பிட்ட பகுதிகளைக் குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.