Loading...
ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சி நடத்திய ஈரான் பாடகி பராஸ்து அஹ்மதிக்கு 74 கசையடிகள் தண்டனை நிறைவேற்றம்
ஹிஜாப் அணியாமல் பாடிய ஈரான் பாடகி பராஸ்து அகமதிக்கு 74 கசையடிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஹிஜாப் அணியாமல் இசை நிகழ்ச்சி நடத்திய ஈரான் பாடகி பராஸ்து அஹ்மதிக்கு 74 கசையடிகள் தண்டனை நிறைவேற்றம்

எழுதியவர் Vasuki
Nov 24, 2026
03:57 pm

செய்தி முன்னோட்டம்

கட்டாய ஹிஜாப் விதிகளை மீறி தலையை மறைக்காமல் ஆன்லைன் இசை நிகழ்ச்சி நடத்திய ஈரானியப் பாடகி பராஸ்து அஹ்மதி மற்றும் அவரது தயாரிப்பு குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்குத் தலா 74 கசையடிகள் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "ஆபாசமான மற்றும் ஒழுக்கக்கேடான" உள்ளடக்கத்தை இணையத்தில் தயாரித்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இவர்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கசையடி தண்டனையுடன் சேர்த்து, இவர்கள் 5 பேரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவொரு கலை மற்றும் இசை நடவடிக்கைகளிலும் ஈடுபடவும், வெளிநாடு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

 சட்ட நடவடிக்கை

யூடியூபில் வெளியான இசை நிகழ்ச்சி

கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஈரானின் கோம் நகருக்கு அருகிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டெய்ர்-இ கச்சின் பகுதியில் நேரடிப் பார்வையாளர்கள் இன்றிப் படமாக்கப்பட்ட இசை நிகழ்ச்சியை பராஸ்து அஹ்மதி யூடியூபில் வெளியிட்டிருந்தார்.

கருப்பு நிற நீண்ட ஆடை அணிந்து, தலையில் ஹிஜாப் இன்றி ஆண் இசைக்கலைஞர்களுடன் இணைந்து அவர் பாடிய இந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலானது.

இதனை ஈரானின் சட்ட மற்றும் மத விதிகளுக்கு எதிரான "சட்டவிரோத இசை நிகழ்ச்சி" எனக் குறிப்பிட்ட அந்நாட்டு நீதித்துறை, பொது ஒழுக்கத்திற்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறிப் பாடகி மற்றும் அவரது குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்தது.

எச்சரிக்கை

பன்னாட்டு மன்னிப்பு சபையின் எச்சரிக்கையையும் மீறி நிறைவேற்றப்பட்ட தண்டனை

இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் நீதிமன்றம் 74 கசையடிகள் தண்டனை விதித்த நிலையில், செப்டம்பர் மாதம் மேல்முறையீட்டிலும் அந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

முன்னதாக, இந்தக் கசையடித் தண்டனையை கொடூரமானது மற்றும் மனிதத்தன்மையற்றது எனக் கண்டித்த பன்னாட்டு மன்னிப்பு சபை, தண்டனையை நிறுத்துமாறு கடந்த அக்டோபரில் ஈரான் அதிகாரிகளை வலியுறுத்தியிருந்தது.

இருப்பினும், சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புகளையும் மீறி தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட மற்ற 4 நபர்களுக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

கட்டாய ஹிஜாப் சட்டம் 

ஈரானின் கட்டாய ஹிஜாப் சட்டம்

கடந்த 2022-ஆம் ஆண்டு ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி காவலில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஈரானில் கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன.

அதன்பிறகு தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களில் பல பெண்கள் ஹிஜாப் இன்றி பொதுவெளியில் தோன்றத் தொடங்கினாலும், பெண்கள் பொதுவெளியில் தனியாகப் பாடுவதற்கும் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஈரானில் கடுமையான தடைகள் நீடிக்கின்றன.

கசையடித் தண்டனையைச் சித்திரவதை என மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வரும் நிலையில், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

ADVERTISEMENT