Loading...
அமெரிக்காவிற்கு 7 நிபந்தனைகளுடன் புதிய அணுசக்தி முன்மொழிவை அனுப்பியது ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் நீடிக்குமா?
அமெரிக்காவிற்கு 7 நிபந்தனைகளுடன் புதிய அணுசக்தி முன்மொழிவை அனுப்பியது ஈரான்

அமெரிக்காவிற்கு 7 நிபந்தனைகளுடன் புதிய அணுசக்தி முன்மொழிவை அனுப்பியது ஈரான்: ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் நீடிக்குமா?

எழுதியவர் Venkatalakshmi V
Nov 06, 2026
01:21 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவுடன் மேற்கொண்டு எந்தவொரு சமாதான பேச்சுவார்த்தையையும் தொடங்குவதற்கு முன்பாக, வாஷிங்டன் நிர்வாகம் நிறைவேற்ற வேண்டிய 7 முக்கிய நிபந்தனைகளுடன் கூடிய புதிய அணுசக்தி முன்மொழிவை கத்தார் நாட்டின் மத்தியஸ்தம் மூலம் ஈரான் அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திற்கு இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த முன்மொழிவை அமெரிக்கா தற்போது தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், ஆனால் அதன் முழு விவரங்கள் இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

ஈரானின் முக்கிய 7 நிபந்தனைகள்

ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் மொஹ்சன் ரேசாய், ரஷ்யாவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது இது குறித்து பேசுகையில்,"அமெரிக்காவுடன் தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு நாங்கள் 7 நிபந்தனைகளை அறிவித்துள்ளோம். வாஷிங்டன் இந்த 7 கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வரை, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் ஜலசந்தியை நாங்கள் திறக்கவும் மாட்டோம், பேச்சுவார்த்தை நடத்தவும் மாட்டோம்" எனக்கூறப்பட்டுள்ளது.

ஈரானின் முக்கியக் கோரிக்கைகளில், அமெரிக்கா விதித்துள்ள அனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் முழுமையாக நீக்க வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

போர்

தொடரும் மோதலும் போர்ப் பின்னணியும்

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு இந்த மோதல் வெடித்தது.

இதற்குப் பதிலாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

தற்போது இந்த மோதல் லெபனான் மற்றும் ஏமன் வரையிலும் பரவியுள்ளது.

மத்திய கிழக்கில் அமைதியைத் திரும்பக் கொண்டுவர கத்தார் உள்ளிட்ட அமைதி மத்தியஸ்தர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

எச்சரிக்கை

டொனால்ட் டிரம்பின் காட்டமான எச்சரிக்கை

அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு பிறகு ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரிக்கவில்லை.

செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,"நாட்டை முழுமையாக அழிப்பதைத் தவிர்க்கவே விரும்புகிறோம், ஆனால் வேறு வழியில்லை என்றால் அதைச் செய்ய நேரிடும். எங்கள் ராணுவம் எப்போதும் தயாராக உள்ளது" என எச்சரித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தில் எந்தவொரு ஒருதலைப்பட்ச நடவடிக்கையையும் எடுக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT