LOADING...
ஈரான் மதத் தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடிக்கு அதிபர் பெசெஷ்கியான் அழைப்பு எனத் தகவல்
ஈரான் மதத் தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு

ஈரான் மதத் தலைவர் காமேனி இறுதிச்சடங்கில் பிரதமர் மோடிக்கு அதிபர் பெசெஷ்கியான் அழைப்பு எனத் தகவல்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 25, 2026
11:31 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச மதத் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் அடக்கச் சடங்குகளில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரகம் மூலம் இந்த அழைப்பு இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இறுதிச்சடங்கு

போரினால் தள்ளிப்போன இறுதிச்சடங்கு - ஜூலை 4 முதல் தொடக்கம்

கடந்த பிப்ரவரி 28 அன்று டெஹ்ரானில் உள்ள அவரது அலுவலக வளாகத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 86 வயதான காமேனி கொல்லப்பட்டார். இஸ்லாமிய விதிகளின்படி உடனடியாக உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றாலும், அந்த சமயத்தில் தீவிரமாக நடந்து வந்த ஈரான் போர் மற்றும் குண்டுவெடிப்புகள் காரணமாக இறுதிச்சடங்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வரும் ஜூலை 4 முதல் ஜூலை 9 வரை 6 நாட்களுக்கு ஈரானின் டெஹ்ரான், கோம் மற்றும் மஷாத் ஆகிய நகரங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

2 கோடி மக்கள்

உலக சாதனை படைக்க வாய்ப்புள்ள 2 கோடி மக்களின் அஞ்சலி

ஈரான் அரசு ஊடகங்களின்படி, ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் டெஹ்ரானின் கிராண்ட் மொசல்லா மைதானத்தில் காமேனியின் உடலுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும். ஜூலை 6 அன்று தலைநகரில் பிரம்மாண்ட இறுதி ஊர்வலமும், ஜூலை 7 அன்று புனித நகரான கோமிலும் சடங்குகள் நடைபெறும். இறுதி அடக்கத்திற்கான சடங்கு ஜூலை 9 அன்று காமேனியின் சொந்த ஊரான மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா ஆலயத்தில் நடைபெறும். இந்த இறுதிச்சடங்கில் சுமார் 2 கோடி மக்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், இது 1989 இல் அயதுல்லா கொமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 1 கோடி மக்கள் என்ற உலக சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.

Advertisement

பிரதமர் மோடி

பிரதமர் மோடி செல்வாரா? இந்தியாவின் ராஜதந்திர நகர்வு

இந்த முக்கியத்துவம் வாய்ந்த இறுதிச்சடங்கில் பங்கேற்க இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது. எனினும், ஜூலை முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதால், அவர் நேரடியாக ஈரானுக்கு செல்வது கடினம் எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும், ஈரானுடனான இந்தியாவின் வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் சார்பில் ஒரு உயர்மட்டக் குழு இந்த இறுதிச்சடங்கில் பங்கேற்கும் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

அரசியல் சூழல்

காமேனிக்கு பின் ஈரானில் நிலவும் அரசியல் சூழல்

காமேனியின் மரணத்திற்குப் பிறகு, அவரது 56 வயது மகனான மொஜ்தபா ஹொசைனி காமேனி கடந்த மார்ச் 8 முதல் ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்று வழிநடத்தி வருகிறார். இதற்கிடையே, பல மாதங்களாக மத்திய கிழக்கைப் போர்ப் பிடியில் வைத்திருந்த ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தற்பொழுது சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்பட்டுள்ள இந்த அமைதிப் பாதை, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் ஒரு புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என உலக நாடுகள் நம்புகின்றன.

Advertisement