LOADING...
ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை: ஈரான் விளக்கம்
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது

ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் வணிகக் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் இல்லை: ஈரான் விளக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
May 26, 2026
06:45 am

செய்தி முன்னோட்டம்

உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கியப் பாதையான 'ஹார்முஸ் நீரிணை' வழியாகச் செல்லும் வணிகக் கப்பல்களுக்குத் தற்காலிகச் சுங்கக் கட்டணம் எதுவும் விதிக்கப்படவில்லை என்று ஈரான் திங்கட்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது. எனினும், கடல்சார் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சேவைகளுக்கான கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்று ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே, ஹார்முஸ் நீரிணையைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வர ஈரான் முயல்வதாகவும், அங்கு செல்லும் கப்பல்களுக்கு வரி விதிப்பதாகவும் வெளியான தகவல்களை அடுத்து இந்த விளக்கம் வந்துள்ளது.

சேவை கட்டணம்

சுங்க வரி இல்லை; சேவை கட்டணம் மட்டுமே

இதுகுறித்து ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய் செய்தியாளர்களிடம் பேசியதாவது, "ஹார்முஸ் நீரிணை, பெர்சியன் வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்திற்கான வழிகாட்டுதல் சேவைகள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான அவசியமான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன". "இத்தகைய சேவைகளை வழங்குவதற்காக மட்டுமே குறிப்பிட்ட சில கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றனவே தவிர, அது கப்பல்கள் கடந்து செல்வதற்கான சுங்க வரி அல்ல." என்று அவர் கூறினார்.

எதிர்ப்பு

ஈரானின் புதிய கட்டுப்பாடுகளும், அமெரிக்காவின் எதிர்ப்பும்

சமீபத்திய வாரங்களில் ஈரான் இந்த சர்வதேச நீர் வழிப்பாதையில் தங்களது ராணுவக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. தீவுகளில் சோதனைச் சாவடிகள் அமைப்பது, கடுமையான கப்பல் தணிக்கை மற்றும் பிரத்யேகப் பயணப் பாதைகளை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டுள்ளது. இந்த மோதலுக்கு முன்பு நாளொன்றுக்கு 125 முதல் 140 கப்பல்கள் இந்த நீரிணையைக் கடந்த நிலையில், தற்போதைய பதற்றம் மற்றும் ஈரானின் புதிய கட்டுப்பாடுகள் காரணமாகக் கப்பல்களின் எண்ணிக்கை பெருமளவில் சரிந்துள்ளது. வணிகக் கப்பல்கள் தங்களைக் கடந்து செல்ல ஈரானின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பதற்காக 'பெர்சியன் வளைகுடா நீரிணை ஆணையம்' என்ற புதிய அமைப்பை ஈரான் உருவாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

சட்டம்

சர்வதேச கடல்சார் சட்டம் கூறுவது என்ன?

சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, ஒரு நாட்டின் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வழித்தடங்களை ஒழுங்குபடுத்த அந்தந்தக் கடலோர நாடுகளுக்கு அதிகாரம் உண்டு. இதுகுறித்து சர்வதேச சட்ட வல்லுநர் உசேன் இஸ்மாயிலி கூறுகையில்,"கடலோர நாடுகள் தங்களது கடல் பகுதியில் கப்பல்கள் மாசு ஏற்படுத்துவதைக் தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காகவும் தனியாகக் கட்டணம் வசூலிக்கலாமே தவிர, சர்வதேச நீரிணைகளில் கப்பல்கள் சுதந்திரமாக கடந்து செல்வதற்கு நேரடியாகச் சுங்க வரி விதிக்கச் சட்டத்தில் இடமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுடன் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்துப் பேசி வரும் சூழலில், உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் ஹார்முஸ் நீரிணையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஈரான் தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருகிறது.

Advertisement