டெல்லியை உலுக்கிய வரலாறு காணாத பெருமழை; ஆனால் யாரும் எதிர்பார்க்காத 'ஒரு' நல்ல விஷயம் நடந்துள்ளது
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தாலும், மறுபுறம் தலைநகர மக்களுக்கு ஒரு அரிய நற்செய்தியும் கிடைத்துள்ளது. தொடர் மழையின் காரணமாக டெல்லியின் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு(AQI) 48 ஆகக் குறைந்துள்ளது; இது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிகத் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான காற்று என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாகவே மோசமான காற்று மாசினால் அவதிப்படும் டெல்லி மக்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல காற்றைச் சுவாசித்துள்ளனர். இதற்கு முன்னதாக கடந்த 2023 செப்டம்பர் 10 அன்றுதான் டெல்லியில் AQI 45 ஆக பதிவாகியிருந்தது. மழையுடன் கூடிய பலத்த காற்றினால் காற்றில் இருந்த மாசுத் துகள்கள் அடித்துச் செல்லப்பட்டதே இதற்குக் காரணம் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
வெள்ளம்
வெள்ளத்தில் மிதந்த சாலைகளும் சேதங்களும்
மேலும், வழக்கமான வெப்பநிலையை விட 7.4 டிகிரி செல்சியஸ் சரிந்து, அதிகபட்ச வெப்பநிலை 29.2 டிகிரியாகக் குறைந்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மறுபுறம் பெய்த அதிரடி மழையால் வடகிழக்கு டெல்லியின் துக்மீர்பூர் பகுதியில் அதிகபட்சமாக 160 மிமீ மழையும், மயூர் விஹார் பகுதியில் 103 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் விகாஸ் மார்க், சங்கம விஹார், புதுடெல்லி ரயில் நிலையப் பகுதி மற்றும் துவாரகா உள்ளிட்ட பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து கார்கள் மீது விழுந்ததோடு, அலிபூர் பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். IMD, இடியுடன் கூடிய மிதமான மழை வரும் நாட்களிலும் தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.