LOADING...
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் முதல்முறையாக கரூர் வரும் முதல்வர் விஜய்; என்ன பிளான்?
இன்று கரூர் வரும் முதல்வர் விஜய்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பின் முதல்முறையாக கரூர் வரும் முதல்வர் விஜய்; என்ன பிளான்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 10, 2026
08:28 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஆண்டு கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு, தமிழக முதல்வர் விஜய் 10 மாதங்கள் கழித்து முதன்முறையாக இன்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ள முதல்வர், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு கரூர் செல்லாத முதல்வர் விஜய், தற்போது அங்கு உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சேர்ந்த 32 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை நேரில் வழங்குகிறார்.

தொழிற்சாலை

ரூ.1,700 கோடியில் புதிய காலணி தொழிற்சாலை

முதல்வர் விஜய்யின் இந்த வருகையின் போது, கரூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ரூ.1,700 கோடி மதிப்பீட்டிலான 'தோல் அல்லாத காலணிகள்' உற்பத்தி தொழிற்சாலைக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த மெகா திட்டத்தின் மூலம் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 13,500 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவுள்ளன. தற்பொழுது சிபிஐ (CBI) விசாரணையில் உள்ள சூழலில், அரசின் இந்த நிவாரண நடவடிக்கைக்கு கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

6,500 போலீசாருடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருச்சி விமான நிலையத்திலிருந்து கரூருக்கு காரில் பயணிக்கும் முதல்வர் விஜய்க்கு, வழிநெடுகிலும் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க தவெக தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரூர் - சேலம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மைதானத்தில் சுமார் 6,000 பேர் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு கூட்டத்திலும் அவர் உரையாற்றுகிறார். அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கும் பொருட்டு, கரூர் முழுவதும் சுமார் 6,500 போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement