அமெரிக்காவின் C-130 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிரடி அறிவிப்பு! 5 பேர் பலி!
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர், உலகையே உலுக்கும் வகையில் புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது. ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15E ஸ்டிரைக் ஈகிள் போர் விமானத்தின் வீரர்களை மீட்கும் முயற்சியின்போது, அமெரிக்காவின் மேலும் சில விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக ஈரான் ராணுவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிரடியாக அறிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஒரு C-130 ராணுவப் போக்குவரத்து விமானம், இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்கள் மற்றும் இஸ்ரேலிய ட்ரோன் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் ராணுவத்தின் குற்றச்சாட்டுகள்
வீழ்த்தப்பட்ட விமானங்கள்
தென் இஸ்பஹான் பகுதியில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஒரு C-130 விமானம் மற்றும் இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் சுடப்பட்டு தற்போது தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த மீட்பு நடவடிக்கையின்போது தென்மேற்கு ஈரானில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ராணுவ வீரர்களா அல்லது பொதுமக்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அமெரிக்க விமானங்களின் சிதைவுகள் பாலைவனத்தில் சிதறிக்கிடக்கும் புகைப்படங்களை ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்க வீரர்களைத் தேடும் துப்பாக்கி ஏந்திய உள்ளூர் மக்களின் வீடியோக்களையும் ஈரான் பகிர்ந்திருந்தது.
ட்ரம்ப் வெளியிட்ட மிராக்கிள் தகவல்
இரு வீரர்களும் மீட்பு
ஈரானின் அறிவிப்புகளுக்கு மத்தியில், வாஷிங்டனில் செய்தியாளர்களைசந்தித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்த மீட்பு நடவடிக்கை ஒரு அதிசயமான மற்றும் துணிச்சலான செயல் எனப் புகழ்ந்து தள்ளினார். எதிரி நாட்டு எல்லைக்குள் சிக்கியிருந்த எங்களது இரண்டு வீரர்களையும் தனித்தனியாக வெற்றிகரமாக மீட்டுவிட்டோம். அமெரிக்க ராணுவ வரலாற்றில் இது போன்ற மீட்புப் பணி இதற்கு முன் நடந்ததில்லையென ட்ரம்ப் அறிவித்தார். மீட்கப்பட்ட வீரர் ஒரு கர்னல் அந்தஸ்தில் உள்ளவர் என்றும், அவருக்குச் சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் குணமடைவார் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். ஒரு அமெரிக்கப் வீரரைக் கூட நாங்கள் எதிரி நாட்டில் விட்டுவிட மாட்டோம் (WE WILL NEVER LEAVE AN AMERICAN WARFIGHTER BEHIND!) என ட்ரம்ப் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய நிலை
சர்வதேச பதற்றம்
ஈரான் ஒருபுறம் அமெரிக்க மீட்புப் பணி 'தோல்வி' என்றும், விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகவும் கூறி வரும் நிலையில், அமெரிக்கா தனது வீரர்களை மீட்டுவிட்டதாகக் கூறி வருகிறது. அமெரிக்கா தனது விமான இழப்புகள்குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள இந்தப் போர் பதற்றம் கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக அமைதிக்கு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.