Loading...
ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய 'தடை செய்யப்பட்ட மண்டலம்': ஈரானின் முடிவும், பெட்ரோல் விலை உயர்வும்
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே புதிய 'தடை செய்யப்பட்ட மண்டலம்' அமைக்கப்படும்

ஹார்முஸ் ஜலசந்தியில் புதிய 'தடை செய்யப்பட்ட மண்டலம்': ஈரானின் முடிவும், பெட்ரோல் விலை உயர்வும்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 07, 2026
07:39 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே புதிய 'தடை செய்யப்பட்ட மண்டலம்' அமைக்கப்படும் என ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சென் ரெசாய் அறிவித்துள்ளார். ஈரான் அரசு தொலைக்காட்சியில் பேசிய மொஹ்சென் ரெசாய், இந்த புதிய தடை மண்டலமானது அமெரிக்க கடற்படையின் முற்றுகைக் கோட்டிலிருந்து தொடங்கி பாரசீக வளைகுடாவின் பல பகுதிகளை உள்ளடக்கும் என்று தெரிவித்தார். இந்த எல்லைக்குள் அனுமதியின்றி நுழையும் அனைத்துக் கப்பல்களும் ஈரானின் தடைகளின் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியை முறியடிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெட்ரோல் விலை

இரட்டிப்பாகும் பெட்ரோல் விலை

ராணுவ கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்கும் நோக்கில், அதிக அளவில் எரிபொருள் பயன்படுத்தும் நுகர்வோருக்கான பெட்ரோல் விலையை செப்டம்பர் 8 முதல் இரட்டிப்பாக்க ஈரான் அரசு முடிவு செய்துள்ளது.

மூன்று அடுக்கு விலை முறையைக் கொண்ட ஈரானில், மூன்றாவது அடுக்கில் உள்ள பெட்ரோல் விலை லிட்டருக்கு 5,000 தோமன்களிலிருந்து 10,000 தோமன்களாக உயர்த்தப்படும் என அரசு செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹாஜரானி தெரிவித்துள்ளார்.

முதல் மற்றும் இரண்டாம் அடுக்கு நுகர்வோருக்கான விலையில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதாரக் தடைகள் தீவிரமடைந்து வரும் சூழலில், பெட்ரோல் விலை உயர்வு மற்றும் கடல்வழிப் பாதை கட்டுப்பாடுகள் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT