அக்டோபர் 28க்குள் ராஜினாமா செய்ய வேண்டும்; ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கெடு வைத்த கனடா எம்பிக்கள்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டை ஆட்சி செய்யும் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கட்சி எம்பிக்கள் கொடுத்து வரும் அழுத்தம் தீவிரம் அடைந்துள்ளது. அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தி 24 எம்பிக்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இந்நிலையில், பார்லிமென்ட் ஹில்லில் ஒரு மூடிய கதவு கக்கஸ் கூட்டத்தின் போது, இந்த எம்பிக்கள் தங்கள் கவலைகளை ஜஸ்டின் ட்ரூடோவிடம் தெரிவித்தனர். ட்ரூடோ அக்டோபர் 28க்கும் இதுகுறித்து முடிவெடுத்து தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. ஜஸ்டின் ட்ரூடோவை எதிர்க்கும் 24 எம்பிக்களில் 4 பேர், அவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா-கனடா மோதலால் பிரதமர் மீது எம்பிக்கள் அதிருப்தி
லிபரல் கட்சிக்குள் ஏற்கனவே சில அரசியல் பிளவுகள் இருந்ததாகக் கூறப்பட்டாலும், இந்தியாவை சீண்டும் விதமாக கனடா பிரதமர் செயல்படுவது மேலும் பல எம்பிக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோவின் குற்றச்சாட்டு இருநாட்டு தூதரக உறவுகளை மோசமாக்கியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா கடுமையாக மறுத்துள்ளதுடன், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு கனடா புகலிடம் அளித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டால் கட்சிக்குள் அதிருப்திகள் அதிகரித்து வருவதாக, அந்நாட்டு குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், ஜஸ்டின் ட்ரூடோ, கட்சிக்குள் எழுந்துள்ள கலகத்தை சரியாக கையாள்வார் என நம்பிக்கை தெரிவித்து, அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.