எதிரி நாட்டில் சிக்கினால் தப்புவது எப்படி? அமெரிக்க விமானப்படையின் ரகசிய சர்வைவல் நுட்பங்கள்!
செய்தி முன்னோட்டம்
ஈரானின் தென்பகுதியில் அமெரிக்காவின் எஃப்-15இ (F-15E) போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் பயணித்த ஒரு விமானியின் கதி என்ன என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. ஈரானிய ராணுவம் ஒருபுறமும், அமெரிக்கச் சிறப்புப் படைகள் மறுபுறமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு விமானி எதிரி நாட்டு எல்லையில் விழுந்தால் அவர் எப்படி உயிர் பிழைப்பார்? இதற்காக அமெரிக்க விமானப்படை வைத்துள்ள ரகசிய 'சர்வைவல்' திட்டங்கள் என்ன என்பதை இதில் தெளிவாகக் காண்போம்.
உயிர் பிழைப்பதற்கான மந்திரம்
செரே (SERE) பயிற்சி
ஒவ்வொரு அமெரிக்க விமானியும் SERE (Survival, Evasion, Resistance, and Escape) எனப்படும் மிகக்கடுமையான பயிற்சியைப் பெறுகிறார்கள். கடினமான சூழலில் தப்பிப் பிழைப்பது, எதிரிகளிடம் சிக்காமல் மறைந்திருப்பது, பிடிபட்டால் சித்திரவதைகளைத் தாங்கி ரகசியங்களைக் காப்பது மற்றும் அங்கிருந்து தப்பிப்பது ஆகியவையே இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்கள்.
பாதுகாப்பு வழிமுறை
விமானியின் உயிர் காக்கும் 'சர்வைவல் கிட்'
எஜெக்ஷன் சீட்டுடன் வரும் 'உயிர் காக்கும் பெட்டி' (Survival Kit) விமானம் கட்டுப்பாட்டை இழக்கும்போது, விமானி இருக்கையோடு வெளியே குதிக்கும்போதே அவருடன் ஒரு சிறிய பெட்டியும் பாராசூட்டில் தரையிறங்கும். இதுதான் அந்த விமானியின் வாழ்வாதாரம். ஜிபிஎஸ் (GPS) கருவிகள், சிக்னல் கண்ணாடிகள் மற்றும் மீட்புக் குழுவைத் தொடர்பு கொள்ள உதவும் அதிநவீன ரேடியோக்கள் இதில் இருக்கும். அடர்ந்த காடு அல்லது நள்ளிரவிலும் மீட்பு ஹெலிகாப்டர்களுக்குத் தனது இடத்தைத் தெரிவிக்க 'ஃபிளேயர்' (Flares) எனப்படும் ஒளி உமிழும் கருவிகள் மற்றும் வண்ணப் புகைக் குண்டுகள் இதில் உண்டு.
உணவு மற்றும் முதலுதவி
மருத்துவ உதவி
எதிரி நாட்டு மண்ணில் பதுங்கியிருக்கும்போது பசி மற்றும் காயங்கள் மிகப்பெரிய சவால்களாக இருக்கும். 3 முதல் 7 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கத் தேவையான அதிகப்படியான கலோரிகள் கொண்ட உணவுப் பொட்டலங்கள் மற்றும் நீரைச் சுத்திகரிக்கும் மாத்திரைகள் இதில் இருக்கும். குதிக்கும்போது ஏற்படும் காயங்களைக் குணப்படுத்த 'டூர்னிக்கெட்' (Tourniquets) மற்றும் கட்டுகள் உள்ளிட்ட முதலுதவிப் பொருட்கள் கைவசம் இருக்கும்.
தற்காப்பு ஆயுதங்கள்
தற்காப்பு மற்றும் இருப்பிடச் சூழல்
பிடிபடும் சூழல் ஏற்பட்டால் தற்காப்பிற்காகச் சிறிய ரகத் துப்பாக்கிகள் அல்லது மடிக்கக்கூடிய 'சர்வைவல்' ரைபிள்கள் (Rifles) அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. தற்போது மாயமான விமானி ஈரானின் ஜாக்ரோஸ் (Zagros) மலைப்பகுதியில் இருக்கலாமெனக் கருதப்படுகிறது. அங்குள்ள கடும் குளிரைத் தாங்க வெப்பப் போர்வைகள் மற்றும் நெருப்பு மூட்டும் கருவிகள் அந்தப் பெட்டியில் இருக்கும். ஒருவேளை விமானி கடலில் விழுந்தால், தானாகவே விரியும் சிறிய ரப்பர் படகு மற்றும் கடல் நீரை வண்ணமாக மாற்றும் வேதிப்பொருள் (Sea Dye) மூலம் அவர் இருக்கும் இடத்தை மீட்புக் குழுவினர் எளிதாகக் கண்டறிய முடியும். அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் மனதிடத்துடன் அந்த விமானி மீட்கப்படுவாரா என்பதை உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.