
சிங்கப்பூரில் பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் 12 கசையடி
செய்தி முன்னோட்டம்
சிங்கப்பூருக்குச் சுற்றுலா சென்றிருந்த இரு இந்தியர்களான, ஆரோக்கியசாமி டைசன் (23) மற்றும் ராஜேந்திரன் மயிலரசன் (27), விடுதி அறைகளில் இரண்டு பாலியல் தொழிலாளர்களைத் தாக்கி கொள்ளையடித்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டனர். வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவருக்கும் ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு மாதச் சிறைத் தண்டனையுடன் 12 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கி கொள்ளையடித்த குற்றத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஏப்ரல் 24 அன்று சிங்கப்பூர் சென்ற இந்த இருவரும், லிட்டில் இந்தியா பகுதியில் ஒரு புரோக்கர் மூலம் பாலியல் தொழிலாளர்களின் தொடர்பு எண்ணைப் பெற்றனர்.
திட்டம்
பணம் தேவைப்பட்டதால் கொள்ளையடிக்க திட்டம்
பணம் தேவைப்பட்டதால், அந்தப் பெண்களை ஹோட்டல் அறைக்குள் வைத்து கொள்ளையடிக்கலாம் என்று ஆரோக்கியசாமி யோசனை கூற, ராஜேந்திரன் அதற்குச் சம்மதித்தார். ஏப்ரல் 26 அன்று, முதல் பெண்ணைச் சந்தித்து, கை கால்களைக் கட்டி, கன்னத்தில் அறைந்து, அவரது நகைகள், 2,000 சிங்கப்பூர் டாலர் ரொக்கம், கடவுச்சீட்டு மற்றும் வங்கி அட்டைகளைக் கொள்ளையடித்தனர். அதே இரவில், இரண்டாவது பெண்ணையும் மற்றொரு ஹோட்டலில் மிரட்டி, வாயைப் பொத்தி, 800 சிங்கப்பூர் டாலர் ரொக்கம் மற்றும் இரண்டு மொபைல் போன்களைத் திருடினர். இந்த இரு ஆண்களும், நிதி நெருக்கடியால் குற்றத்தைச் செய்ததாக நீதிபதியிடம் கருணை கோரினர். சிங்கப்பூர் சட்டப்படி, தாக்குதலுடன் கூடிய கொள்ளைக்கு 5-20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.