காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவின் சொத்துக்கள்; இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா பரபரப்பு குற்றச்சாட்டு
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விசாரணையில் மூத்த இராஜதந்திரிகளை ஆர்வமுள்ள நபர்கள் என்று கனடா குறிப்பிட்டதை அடுத்து திரும்ப அழைக்கப்பட்ட இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா, காலிஸ்தானி தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையின் (சிஎஸ்ஐஎஸ்) ஆழமான சொத்துக்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். கனடாவை தளமாகக் கொண்ட சிடிவி ஊடகத்திடம் பேசிய சஞ்சய் குமார் வர்மா, ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் காலிஸ்தானி தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டினார். அவர் ஆதாரங்களை வழங்கவில்லை என்றாலும், அவர்கள் சிஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடையவர்கள் என்று வலியுறுத்தினார். காலிஸ்தானி பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலையில் இந்திய தூதர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியுள்ளது.
கனடாவின் குற்றச்சாட்டை நிராகரித்தது இந்தியா
இந்தக் கூற்றுகள் அடிப்படையற்றவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று இந்தியா நிராகரித்துள்ளது. மேலும், குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த கனடா உறுதியான ஆதாரங்களை வழங்க வேண்டும் என்று கோரியது. முன்னதாக, கடந்த வாரம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அரசாங்கத்தின் கூற்றுக்கள் உளவுத்துறையின் அடிப்படையிலானவை என்றும் உறுதியான ஆதாரம் அல்ல என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சஞ்சய் குமார் வர்மா தனது பேட்டியில், கனடாவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடும் கனேடிய குடிமக்கள் என்று கூறியுள்ளார். இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்க நினைக்கும் நபர்களுடன் ஒத்துப்போவதை விட, இந்தியாவின் கவலைகளை ஒப்புக்கொள்ளுமாறு கனடா அரசாங்கத்தை அவர் வலியுறுத்தினார்.