
தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
சனிக்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான், தனது மூன்று விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் குறிவைத்ததாக கூறியது.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி அதிகாலை 4 மணியளவில் இஸ்லாமாபாத்தில் அவசரமாக கூட்டப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில், பாகிஸ்தான் விமானப்படையின் நூர் கான் (சக்லாலா, ராவல்பிண்டி), முரித் (சக்வால்) மற்றும் ரஃபிகி (ஜாங் மாவட்டத்தில் ஷோர்கோட்) விமானப்படை தளங்கள் குறிவைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம், தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியாவின் சில ஏவுகணைகள் பாகிஸ்தானின் உள்ள பஞ்சாபையும் தாக்கியதாகவும், சில ஆப்கானிஸ்தானுக்குள் சென்றதாகவும் ஷெரீப் கூறினார்.
சேதம்
இந்தியாவின் ஏவுகணை தாக்குதலால் எந்த சேதமும் ஏற்படவில்லை: பாகிஸ்தான்
"ஆனால் விமானப்படையின் அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளன," என்று பாக்., ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.
இந்தியா தனது ஜெட் விமானங்கள் மூலம் வானிலிருந்து தரைக்கு ஏவப்படும் ஏவுகணைகளை ஏவியுள்ளது என்று அவர் கூறினார்.
பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்பால் பல ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
"இந்தியா இப்பிராந்தியத்தை கொடிய போருக்குத் தள்ளும் ஒரு மோசமான செயல் இது, இந்த ஆக்கிரமிப்புக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும். இந்தியா நமது பதிலுக்காகக் காத்திருக்க வேண்டும்" என்று சவுத்ரி கூறினார். எனினும், அவர் செய்தியாளர்களின் எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் சந்திப்பை உடனே நிறுத்திக்கொண்டார்.
வான்வெளி
வான்வெளியை மூடுவதாக பாகிஸ்தான் அறிவிப்பு
சிவில் விமானங்களை கேடயமாக பயன்படுத்துகிறது என நேற்று இந்தியா கூறியதையடுத்து வான்வெளியை மூடுவதாக பாகிஸ்தான் அறிவித்தது.
இது சார்ந்த அறிவிப்பை பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் (PAA) வெளியிட்டது.
அதன்படி பாகிஸ்தானின் வான்வெளி அதிகாலை 3.15 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அனைத்து வகையான விமானப் போக்குவரத்திற்கும் மூடப்பட்டுள்ளதாகக் கூறியது.
PAA மதியம் 12 மணிக்கு புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறியது.