இந்தியாவில் முதல் தாலிபான் தூதரை நியமிக்க ஆப்கானிஸ்தான் திட்டம்; இருதரப்பு உறவில் அடுத்த முன்னேற்றம்
செய்தி முன்னோட்டம்
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் இந்தியாவுக்கு வருகை தந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி 2021 ஆகஸ்டில் பொறுப்பேற்ற பிறகு, இந்தியாவில் முதல் முறையாக ஒரு தாலிபான் தூதர் நியமிக்கப்பட உள்ளார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து, டிசம்பர் பிற்பகுதியிலோ அல்லது ஜனவரி தொடக்கத்திலோ மற்றொரு தூதரும் நியமிக்கப்படவுள்ளதாக தாலிபான் நிர்வாகம், இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது. முத்தக்கியின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது, இந்தியாவுடனான நம்பிக்கையான உறவை வலுப்படுத்துவதாக ஆப்கானிஸ்தான் உறுதியளித்தது.
இந்தியா
ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் தூதரகம்
பதிலுக்கு, ஆப்கானிஸ்தான் அரசிற்கு இந்திய அரசு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் வழங்காவிட்டாலும், அத்தியாவசிய உதவிகள் மற்றும் மருத்துவப் பொருட்களைத் தொடர்ந்து வழங்குவதாக இந்தியா உறுதி அளித்தது. முத்தக்கியின் வருகைக்குப் பிறகு, காபூலில் உள்ள தனது தொழில்நுட்பத் தூதரகத்தை (Technical Mission) முழுமையான தூதரகத்தின் நிலைக்கு உயர்த்துவதாகவும், தாலிபான் தூதரக அதிகாரிகளை ஏற்றுக்கொள்வதாகவும் இந்தியா அறிவித்தது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, இரு நாடுகளும் விரைவில் தூதரகத்தின் தலைமை அதிகாரிகளைப் பரிமாறிக்கொள்ள உள்ளன. இந்தியா அனுப்பிய 16 டன்களுக்கும் அதிகமான நோய் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொண்டதற்காகத் தாலிபான் செய்தித் தொடர்பாளர் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார்.