"இந்தியா அமெரிக்காவை பலவீனமாக பார்க்கிறது": நிக்கி ஹேலி பகிரங்க குற்றச்சாட்டு
தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா புத்திசாலித்தனமாக விளையாடி வருவதாகவும், ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் நிக்கி ஹேலி கூறியுள்ளார். குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான நிக்கி ஹேலி நேற்று நடைபெற்ற பிரச்சார உரையில் இந்தியாவின் போக்கை குற்றம் சாட்டினார். தன்னுடைய உரையில், இந்தியா அமெரிக்காவுடன் நட்புறவுடன் இருக்க விரும்புகிறது, ஆனால் தற்போது அமெரிக்கர்கள் அவர்களை வழிநடத்துவதை நம்பவில்லை என்று கூறினார். அதோடு தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா ராஜதந்திர முறையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டுவதாகவும் இந்திய-அமெரிக்க நிக்கி ஹேலி கூறினார். நிக்கி ஹேலி, ஃபாக்ஸ் பிசினஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவை பலவீனமான நாடாக இந்தியா பார்க்கிறது என்று கூறியதாக பிடிஐ தெரிவித்துள்ளது.
நிக்கி ஹேலி கூறுவது என்ன?
"நான் மோடியுடன் பேசினேன். இந்தியா நம்முடன் ஒரு கூட்டாளியாக இருக்க விரும்புகிறது. அவர்கள் ரஷ்யாவுடன் கூட்டு சேர விரும்பவில்லை. பிரச்சனை என்னவென்றால், இந்தியா நம்மை நம்பவில்லை. நாம் வெற்றி பெறுவோம், அவர்களை வழிநடத்துவோம் என்று அவர்கள் நம்பவில்லை". "நாம் பலவீனமாக இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். இந்தியா புத்திசாலித்தனமாக, ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கிறது. ஏனென்றால் இந்தியாவிற்கு தேவைப்படும் ராணுவ உபகரணங்கள் அங்குதான் நிறைய கிடைக்கும்" என்று அவர் கூறினார். "சீனாவைச் சார்ந்து இருக்க கூடாது என்பதற்காக இந்தியா ஒரு பில்லியன் டாலர் அளவிற்கு செலவு செய்து வருகிறது" என்றும் அவர் ஃபாக்ஸ் பிசினஸ் நியூஸிடம் கூறினார்