Loading...
எல்லையில் அமைதி திரும்புமா? இந்தியா - சீனா இடையே எட்டப்பட்ட 8 அம்ச உடன்பாடு; முழு விபரம்
இந்தியா - சீனா இடையே எட்டப்பட்ட 8 அம்ச உடன்பாடு

எல்லையில் அமைதி திரும்புமா? இந்தியா - சீனா இடையே எட்டப்பட்ட 8 அம்ச உடன்பாடு; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 27, 2026
10:25 am

செய்தி முன்னோட்டம்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுச் செயலாளர் வாங் யி ஆகியோருக்கு இடையே பெய்ஜிங்கில் சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்திலான 25வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எல்லை வரையறை மற்றும் எல்லை மேலாண்மையை விரைவுபடுத்த இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன. இக்கூட்டத்தின் முடிவில் இரு தரப்பும் இணைந்து 8 முக்கிய முடிவுகள் மற்றும் ஒப்பந்தங்களை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து அமைதியை நிலைநிறுத்தவும், நிலுவையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் இரண்டு நாடுகளும் சம்மதித்துள்ளன.

ஹாட்லைன் வசதி

ராணுவத் தொடர்புகளை வலுப்படுத்த புதிய ஹாட்லைன் வசதிகள்

எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் தவறான புரிதல்களையும் மோதல்களையும் தவிர்க்க ராணுவ அதிகாரிகள் நிலையிலான புதிய கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காகக் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் கூடுதலாக இரண்டு எல்லை ராணுவ ஹாட்லைன் தொடர்புகள் உருவாக்கப்படும்.

தூதரக மற்றும் ராணுவ அமைப்புகள் மூலம் நிலவும் எல்லைப் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

எல்லைப் பகுதியில் அமைதியைத் தக்கவைக்க இது மிகவும் அவசியமாகும்.

மேலும் இரு நாட்டு எல்லைப் படைத் தளபதிகளுக்கு இடையேயான உயர் மட்டக் கூட்டங்களுக்கான சந்திப்பு இடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது.

வர்த்தகம் மற்றும் யாத்திரை

எல்லை வர்த்தகம் மற்றும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம்

எல்லைப் பகுதியில் வர்த்தகம் மற்றும் கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் திறப்பது குறித்து இரு நாடுகளும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன.

கைலாஷ் யாத்திரை செல்லும் இந்திய அதிகாரப்பூர்வக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

அதேபோல எல்லையில் உள்ள மூன்று வர்த்தகப் புள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

எல்லையில் அமைதியான சூழலை உருவாக்கி இருதரப்பு உறவை மேம்படுத்த இந்த நடவடிக்கைகள் பெரிதும் உதவும்.

மேலும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், தீர்த்த யாத்திரை மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்களை வலுப்படுத்தத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பும் உறுதியளித்துள்ளன.

ADVERTISEMENT

பேச்சுவார்த்தை

நதிநீர் தரவு பகிர்வு மற்றும் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை திட்டம்

பிரம்மபுத்திரா மற்றும் சட்லெஜ் நதிகளின் வெள்ளக் கால தரவுகளைப் பகிர்வது தொடர்பாக நிபுணர் குழுவின் கூட்டத்தை வரும் செப்டம்பர் மாதம் நடத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டின் கொள்கை ஒப்பந்தத்தின்படி நியாயமான தீர்வை எட்ட இரு நாடுகளும் உறுதியளித்துள்ளன.

இதன் அடுத்தகட்டமாக 26வது சுற்றுப் பேச்சுவார்த்தை இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு சீன அதிபர் வரவிருக்கும் சூழலில் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.

எல்லைப் பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT