தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய மூலிகை செடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெயர் வைப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டின் கடலூர் மாவட்ட சோழமண்டலக் கடற்கரையில் உள்ள மணல் மேடுகளில் தாவரவியல் ஆய்வாளர்கள் புதிய வகை மூலிகை செடி ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஆய்வுக் குழுவினர் மேற்கொண்ட கள ஆய்வில் இந்த அரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவரான திரௌபதி முர்முவின் சாதனையைப் போற்றும் வகையில், இந்தத் தாவரத்திற்கு லியூகாஸ் திரௌபதியே எனப் பெயரிடப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்தல்
சர்வதேச லண்டன் அருங்காட்சியகம் மூலம் உறுதிப்படுத்தல்
புதிய மூலிகையின் வளர்ச்சி முறையைக் கண்டறிய ஆய்வாளர்கள் ஓராண்டு காலம் அதன் வாழ்வியலைக் கண்காணித்தனர்.
லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் ராயல் பொட்டானிக் கார்டன்ஸ் ஆகியவற்றின் வரலாற்றுத் தாவரப் பதிவுகளுடன் இது ஒப்பிடப்பட்டது.
இதன் மூலம் லியூகாஸ் பேரினத்தில் உள்ள 155 சிற்றினங்களில் இருந்து இது முற்றிலும் மாறுபட்ட புதிய வகைச் செடி என்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தத் தாவரம் புதினா தாவரக் குடும்பத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்துவம்
புதிய மூலிகைத் தாவரத்தின் தனித்துவமான அமைப்புகள்
பொதுவாக இந்த வகைத் தாவரங்கள் படரும் புதர்களாகவோ ஆழமான வேர்களைக் கொண்டதாகவோ இருக்கும்.
ஆனால், இந்த புதிய லியூகாஸ் திரௌபதியே மூலிகை 15 சென்டிமீட்டர் உயரத்தில் ஒரே ஒரு தண்டுடன் நேராக வளரும் தன்மையுடையது.
நகரும் கடற்கரை மணலில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள இவை வலை போன்ற மெல்லிய வேர் அமைப்பைக் கொண்டுள்ளன.
மேலும், இதன் விதைகள் அடர் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் கூடிய நீள்வட்ட தங்க நிறத்தில் காட்சியளிக்கின்றன.
அச்சுறுத்தல்
கடற்கரைச் சூழலியல் பாதுகாப்பு மற்றும் அச்சறுத்தல்கள்
இந்தக் கண்டுபிடிப்பு தமிழ்நாட்டின் கடற்கரை மணல் மேடுகளின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளது.
இந்த இயற்கை மணல் மேடுகள் கடலோர அரிப்பு மற்றும் கடல் அலைகளின் சீற்றத்தில் இருந்து நிலப்பகுதியைப் பாதுகாக்கும் அரணாக செயல்படுகின்றன.
இருப்பினும், கால்நடைகளின் மேய்ச்சல் மற்றும் யூக்கலிப்டஸ் மரங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த இயற்கை அமைப்புகள் பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இதனால் இந்தத் தாவரத்தின் பரவலைத் தொடர்ந்து கண்காணிக்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.