புதிய கண்ணிவெடி வைத்தால் உடனடி அழிவு! ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மீட்டதாக டொனால்ட் டிரம்ப் அதிரடி
செய்தி முன்னோட்டம்
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியில் பதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கடல் கண்ணிவெடிகளும் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேசக் கடல் எல்லையில் அமைந்திருக்கும் இந்த முக்கியப் பாதையை அமெரிக்கக் கடற்படை தற்போது தனது முழுப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்தத் தகவலைத் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிர்ந்துள்ள டிரம்ப், வர்த்தகக் கப்பல்கள் இனி எவ்வித அச்சமுமின்றி இந்தப் பகுதியைப் பயன்படுத்தலாம் என்றும் உறுதி அளித்துள்ளார்.
எச்சரிக்கை
"புதிய கண்ணிவெடி வைத்தால் உடனடி அழிவு": ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் ஈரான் மீண்டும் புதிய கண்ணிவெடிகளைப் பதிக்க முயற்சித்தால், அதற்கான விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இனிமேல் அப்பகுதியில் கண்ணிவெடிகளை வைக்கும் பணியில் ஈடுபடும் எந்தவொரு போர்க்கப்பலும் அல்லது படகும் உடனடியாகத் தாக்கி அழிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கானத் தீர்க்கமான உத்தரவுகள் அமெரிக்கப் படைகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும், இந்த எச்சரிக்கை செய்தி ஈரான் அரசிற்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கண்காணிப்பு
விண்வெளிப் படை மூலம் 'பிக்ஆக்ஸ்' மலை மற்றும் அணுஉலைகள் கண்காணிப்பு
அமெரிக்க விண்வெளிப் படையின் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஹார்முஸ் ஜலசந்தியின் ஒவ்வொரு சதுர அங்குலமும் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதேவேளையில் ஈரானின் நடான்ஸ் அணுஉலைக்கு அருகே நிலத்தடியில் அமைந்திருக்கும் பிக்ஆக்ஸ் மலை அணு ஆயுத மையத்தையும், ஏற்கனவே சேதப்படுத்தப்பட்ட பிற 3 அணுஉலைகளையும் அமெரிக்கப் படைகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
சர்வதேசக் கடல் எல்லையில் எவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்றும் அமெரிக்க அதிபர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பொருளாதாரத் தடைகள்
ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தும் அமெரிக்கா
மற்றொரு புறம் ஈரானுடன் தொடர்ந்து வர்த்தக உறவு வைத்துக்கொள்ளும் நாடுகளுக்குப் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் திட்டத்தை அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸன்ட் அறிவித்துள்ளார்.
ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை மூலம் ஈரானை சர்வதேச நிதி அமைப்புகளிலிருந்து தனிமைப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது.
இருப்பினும், பிற நாடுகள் ஈரானுடனான வர்த்தக உறவை உடனடியாகத் துண்டித்துக் கொள்வதற்குப் போதிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.